நீண்டகால சஸ்பெண்ட் ஏற்க முடியாது: வி.ஏ.ஓ-வை மீண்டும் பணியில் அமர்த்த ஐகோர்ட் உத்தரவு

நீண்ட காலமாக ஒருவரைப் பணியிடை நீக்கத்தில் (Suspension) வைத்திருக்கச் சட்டப்படி அனுமதியில்லை என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை (VAO) மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த ராமச்சந்திரன் என்பவர் மீது, பட்டா வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அவர் கடந்த ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், நீண்ட காலமாகத் தொடர் பணியிடை நீக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்ததால், அந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ராமச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதாடுகையில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து 7 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை; துறைரீதியான நடவடிக்கைக் குறிப்பாணையும் வழங்கப்படவில்லை. தகுந்த சட்டப்பூர்வக் காரணங்கள் ஏதுமின்றி 7 மாதங்களுக்கு மேல் ஒருவரைத் தொடர் சஸ்பெண்டில் வைத்திருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா தனது உத்தரவில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டினார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை, துறைரீதியான நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தாலும், ஒருவரை நீண்ட காலம் பணியிடை நீக்கத்திலேயே வைத்திருக்க முடியாது என்றும், அதைச் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். அதன்படி, மனுதாரரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, அவரை முக்கியத்துவம் இல்லாத வேறொரு பணியிடத்தில் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார்.

Source link