”நீதிபதிகள் நியமனத்தில் பாஜக அரசின் தலையீடு?”; நாட்டின் ஜனநாயகம் குறித்து ஜெய்ராம் ரமேஷ் வேதனை

நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய பாஜக அரசின் தலையீடு இருப்பதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ”வித் அவுட் ஃபியர் ஆர் ஃபேவர்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.  இன்னும் வெளியிடப்படாத அந்த புத்தகத்தில், அவர் குறிப்பிட்டுள்ள பல்வேறு விஷயங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நீதிபதிகளின் நியமனங்களில் பாஜக ரசின் தலையீடு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.   

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ”முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் எழுதியுள்ள புத்தகம், நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.    

நீதிபதி நியமனங்களில் அரசாங்கத்தின் தலையீடு, கொலீஜியம் (நீதிபதிகள் குழு) கூடும் முன்பே அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற முயல்வது, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியின் சாதி குறித்து அபத்தமான கேள்விகளை எழுப்புவது போன்ற சம்பவங்களை நீதிபதி கவுல் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய விஷயங்களை, மிகவும் கவனமாகவும் அளவோடும் நீதிபதி கவுல் ஆவணப்படுத்தியுள்ளார்.

இதில், ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி, நீதிபதிகளின் நியமனங்களுக்கு முன்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் நடப்பதை மறுக்கவில்லை. அரசாங்கத்திற்கும் தலைமை நீதிபதிக்கும் இடையே உரையாடல் இருப்பதும், நியமனங்களில் அரசாங்கத்திற்கு ஒரு பங்கு இருப்பதும் இயல்பானதே என்று முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிடும்போது, ​​நீதித்துறையின் சுதந்திரம் குறித்த கேள்விகள் இன்னும் தீவிரமடைகின்றன.

பி.எம்.எல்.ஏ வழக்கின் தீர்ப்பில் உள்ள சில அம்சங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பிய பிறகு, அவரிடம் எந்த ஆலோசனையும் இன்றி அந்த வழக்கு வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பது மிகவும் கவனிக்க வேண்டிய விவகாரமாகும். இது, உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் அரசாங்கம் அன்றாடம் தலையிடும் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நீதிபதிகளின் நியமனங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற அழுத்தம் கொடுக்கப்படுவதும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகளே மாற்றப்படுவதும் நடக்கும்போது, ​​ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியது அவசியமாகிறது. இது நீதித்துறை மீதான அழுத்தம் இல்லையென்றால், அதன் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சி இல்லையென்றால், இதற்குப் பெயர் என்ன?

அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்ட இந்த அமைப்பு, அதிகாரத்தின் அழுத்தங்களிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல! அது ஒரு கட்டாயத் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.