புதுடில்லி: தமிழகத்தின், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதே சமயம், அந்த நிலத்தில் கட்டப்பட்ட 20 குடியிருப்புகளை இடிப்பதற்கு முன், உரிமையாளர்களுக்கு மாற்று நிலம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கிராமத்தில் உள்ள ஒரு சர்வே எண் நிலம், 1911ம் ஆண்டு வருவாய் பதிவேடுகளில், ‘அரசு புறம்போக்கு கணக்கன் குட்டை’ என தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 1.68 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலத்தில், 0.72 ஏக்கருக்கு கடந்த 2011, ஜனவரியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரியால் பி.ராமதாஸ் என்பவருக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டது. அதாவது குறிப்பிட்ட நிலத்தில் விவசாயம் செய்யவும், வரி செலுத்தவும் தனி நபருக்கு வருவாய் ஆவணமாக இந்த பட்டா வழங்கப்பட்டது.
இதையடுத்து, அந்த நிலம் விற்பனை பரிவர்த்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதில், 20 குடியிருப்புகள் கட்டுவதற்கான காலி மனைகள் உருவாக்கப்பட்டன. மேலும், இந்த நிலத்தை அடமானமாக பெற்று, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியும் 3.40 கோடி ரூபாய் கடன் வழங்கியிருந்தது.
இந்நிலையில், உரிய சட்ட விதிகளை மீறி பட்டா வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி கடந்த 2019 டிசம்பரில், நில நிர்வாக ஆணையர் அதை ரத்து செய்தார். இதனை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து, அங்கு கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றிவிட்டு, நீர்நிலையை மீட்கும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூன்று மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வி.என்.பாத்தி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வில் கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசு நிலத்தின் பழைய வருவாய் பதிவுகள் அது கண்மாய் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் என்பதை தெளிவுபடுத்துகிறது. பட்டா வழங்குவதற்கு தகுதியான ரயத்துவாரி நிலம் என்பதை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை. எனவே, பட்டாவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும்.
அதே நேரத்தில், வீட்டு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் வீடுகளை இடித்து அகற்றினால், பல குடும்பங்கள் தெருவுக்கு வரும் நிலை ஏற்படலாம். எனவே, தமிழக அரசின் தலைமை செயலரும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், 20 வீடுகளின் உரிமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்துக்கு, அதற்கு இணையான பரப்பளவு கொண்ட காலி மனையை ஒதுக்க வேண்டும்.
முடிந்தவரை ஆறு மாதங்களுக்குள் இந்நடவடிக்கையை முடிக்க வேண்டும். அதன் பிறகே, 0.22 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து, நீர்நிலையை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
