நீலகிரியில் கனமழை காரணமாக மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 23-ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் பர்லியாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அரசுப் பேருந்து சிக்கி ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சாலையில் மொத்தம் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் கடந்த 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டன. கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில், தற்போது மழை கொஞ்சம் குறைந்துள்ளது.

இதையடுத்து, மழை நிலவரத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், மூடப்பட்டிருந்த அனைத்து சுற்றுலாத் தலங்களும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. எனினும், பணி நாள் என்பதாலும், மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்படாததாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link