நீலகிரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. குறிப்பாக, ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட நீலகிரியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் நிலச்சரிவுக்கான அபாயமும் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலா மையங்களையும் மறு உத்தரவு வரும் வரை மூட, கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழையால் சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
