நீலாங்கரை வீட்டைகாலி செய்யும் முதல்வர் விஜய்? சென்னையின் மையப்பகுதியில் புதுப்பிக்கப்படும் அரசு இல்லம்-எங்கே தெரியுமா? – tamil nadu cm vijay neelankarai house shift pothigai illam raja annamalaipuram renovation

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள தனது சொந்த இல்லமான நீலாங்கரையில் இருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவுக்குக் குடிபெயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தினசரி அரசுப் பணிகளுக்காக நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு வரும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காவல்துறைப் பாதுகாப்பை எளிமைப்படுத்தவும் இந்த முடிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த முழுமையான பின்னணி, தற்போதைய நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அரசு இல்லம் மாற்றப்படுவதன் சாதக-பாதகங்கள் குறித்த விரிவான செய்திப் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அதிகார மையங்களின் இருப்பிடம் சாலை

சென்னையின் மிக முக்கியமான மற்றும் வி.ஐ.பி. பகுதியாக விளங்குவது ராஜா அண்ணாமலைபுரம். இங்குள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலை மற்றும் பசுமைவழிச் சாலை ஆகிய இரு பகுதிகளில்தான் தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த அரசு உயரதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அரசு இல்லங்கள் அமைந்துள்ளன. கடந்த காலங்களில் தமிழக முதலமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது சொந்த இல்லமான போயஸ் கார்டனிலும், மு. கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்திலும், மு.க. ஸ்டாலின் தனது சித்தரஞ்சன் சாலை இல்லத்திலும் வசித்து அங்கிருந்தே பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் அரசு பங்களாக்களுக்குக் குடிபெயரவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமி மட்டுமே பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்கி நிர்வாகப் பணிகளைக் கவனித்தார். இந்நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கிருந்தே தினமும் புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார்.

பொதுமக்களும் போக்குவரத்தும் சந்திக்கும் சவால்கள்

நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் சுமார் 17 முதல் 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நகரின் நெரிசலான சாலைகளின் வழியே இந்த நீண்ட தொலைவைக் கடக்க வேண்டியுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, அவரது வாகன அணிவகுப்பு (Convoy) செல்லும் பாதையிலும், அதனை இணைக்கும் குறுக்குச் சாலைகளிலும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். தொடக்கத்தில் இருபுறமும் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டதால், காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சாலைத் தடுப்புகளால் பிரிக்கப்பட்டு, ஒருபுறம் முதலமைச்சரின் கான்வாய் செல்லவும், மறுபுறம் வழக்கமான வாகனங்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. எனினும், வேகம் குறைக்கப்படுவதாலும் சிக்னல்கள் நிறுத்தப்படுவதாலும் ஏற்படும் நெரிசல் முழுமையாகத் தீரவில்லை. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

காவல்துறையினருக்கு ஏற்படும் கடுமையான பணிச்சுமை

முதலமைச்சரின் நீண்ட தூரப் பயணப் பாதுகாப்பு என்பது காவல்துறைக்கு மிகப்பெரிய மனிதவள விரயத்தையும் பணிச்சுமையையும் தருகிறது: முதலமைச்சரின் கான்வாய் பாதுகாப்பிற்காகப் பாதையின் நெடுகிலும் சுமார் 10 அடிக்கு ஒரு காவலர் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. நீலாங்கரையில் இருந்து கோட்டை வரையிலான வழித்தடத்தில் உள்ள பல காவல் நிலையங்களைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் தினசரி காலை மற்றும் மாலை பாதுகாப்புப் பணியில் (Bandobast) ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் காவல் நிலையங்களில் பொதுமக்களின் புகார்களை விசாரிப்பது, வழக்கு விசாரணை மற்றும் வழக்கமான சட்டம்-ஒழுங்கு ரோந்துப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.

பொதிகை இல்லம் -புனரமைப்புப் பணிகள் தீவிரம்

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, தலைமைச் செயலகத்திற்கு மிக அருகிலும், அதிகாரப்பூர்வ வி.ஐ.பி. பாதுகாப்பு வளையத்திற்குள்ளும் உள்ள அரசு இல்லத்திற்கு முதலமைச்சர் மாறுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ராஜா அண்ணாமலைபுரம் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் (தொல்காப்பியர் பூங்கா அருகே) அமைந்துள்ள ‘பொதிகை இல்லம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இல்லமானது முன்னதாகத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். வசித்த அரசு பங்களாவாகும். தற்போது இந்த இல்லத்தில் வர்ணம் பூசுதல், மின் இணைப்பு மற்றும் உள் அலங்காரப் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் நேரில் சென்று இல்லத்தைப் பார்வையிட உள்ளார். அவரது ஒப்புதலுக்குப் பிறகும், பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளும் தணிக்கைக்குப் பிறகும் இந்த இல்லம் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றப்பட்டு அரசு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டினப்பாக்கம் இல்லம் & பனையூர் அலுவலகம்

பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தை விஜய் பல ஆண்டுகளாகத் தனது தனிப்பட்ட அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார். திரைப்படங்களில் நடித்த காலகட்டத்தில் கதை கேட்பது மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளுக்கு மட்டுமே இந்த இல்லம் பயன்படுத்தப்பட்டது. முதலமைச்சரான பின்னரும் கூட, திரைப்படக் கலைஞர்கள் மற்றும் நெருங்கிய விருந்தினர்களுடனான தனிப்பட்ட சந்திப்புகள் மட்டுமே அங்கு நடைபெறுகின்றன. சிலர் அதை முழுநேரக் குடியிருப்பாக மாற்றி தலைமைச் செயலகத்தை அருகிலேயே கட்டத் திட்டமிடுவதாகக் கிளப்பிய வதந்திகள் உண்மையில்லை. அது ஒரு முகாமாக மட்டுமே செயல்படுகிறது

பனையூர் அலுவலகம்

கட்சியின் தலைமை அலுவலகம் நகரின் மையப்பகுதியில் (அண்ணா அறிவாலயம், கமலாலயம், சத்தியமூர்த்தி பவன் போன்று) இல்லாமல் புறநகர்ப் பகுதியான பனையூரில் அமைக்கப்பட்டதற்குக் காரணம் இருந்தது. நீலாங்கரை இல்லத்திற்கு அருகிலேயே இருப்பதாலும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருகையால் நகருக்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் அது தேர்வு செய்யப்பட்டது. ஆனால், தற்போது அரசாங்கத்தின் நிர்வாக மையம் கோட்டையில் இருப்பதால், தலைமைச் செயலகத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பு அவசியமாகிறது.

அரசு பங்களாவுக்கு மாறுவதால் ஏற்படும் நன்மைகள்

முதல்வர் விஜய் ராஜா அண்ணாமலைபுரம் அரசு பங்களாவுக்கு மாறுவது பல்வேறு தரப்பிலும் வரவேற்கத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஈ.சி.ஆர் மற்றும் காமராஜர் சாலை வழித்தடங்களில் காலை மற்றும் மாலையில் தினசரி ஏற்படும் கடுமையான போக்குவரத்துத் தடைகள் நீங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கும். நீண்ட தூர பாதுகாப்புப் பணிக்காகப் பல மணி நேரம் காவல் நிலையப் பணிகளை விட்டுவிட்டுச் சாலையில் நிற்கும் காவலர்களின் பணிச்சுமை பெருமளவு குறையும். நீலாங்கரையில் உள்ள ஆடம்பர பங்களாவில் வசிக்காமல், மற்ற அமைச்சர்களைப் போல எளிமையான அரசு இல்லத்தில் தங்கி மக்கள் பணி ஆற்றுகிறார் என்ற ‘எளிய முதலமைச்சர்’ பிம்பம் மக்கள் மத்தியில் அவருக்குக் கூடுதல் நன்மதிப்பைப் பெற்றுத்தரும். ராஜா அண்ணாமலைபுரம் பொதிகை இல்லத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததும், பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டு இறுதி முடிவு எட்டப்படும். இந்த இல்ல மாற்ற முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Source link