நீ என்ன ரவுடியா? மார்க்கண்டேயன் பேச்சுக்காக தி.மு.க தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் காட்டம்

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஒருமையில் மற்றும் முதுகெலும்பை உடைப்பேன் என மிரட்டும் வகையிலும் பேசிய விளாத்திக்குளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி இது குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது கடுமையான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆவேசமாகப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி, ஒரு சட்டமன்ற உறுப்பினர், நாட்டின் முதலமைச்சரின் முதுகெலும்பை முறிப்பேன் என்று பேசுவது எந்த விதத்தில் கருத்து சுதந்திரமாகும்? இப்படிப் பேசுபவர்கள் அடியாட்களா அல்லது ரவுடிகளா? என்று கடுமையாக சாடினார். மேலும் பேசிய அவர், இதுபோன்ற சமூக விரோதப் பேச்சுக்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, காவல்துறையினர் மார்க்கண்டேயன் மீது மேற்கொண்ட கைது நடவடிக்கை முற்றிலும் சரியானது. இச்சம்பவம் நடந்த இந்நேரத்திற்குள் தி.மு.க தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசியல் களம் என்பது கொள்கை ரீதியாகவும் நேர்மையாகவும் பேசப்பட வேண்டிய ஒன்று. அதை விடுத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திவரும் போராட்டம் குறித்துப் பேசிய அழகிரி, இந்த போராட்ட விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான எதிரான நிலைப்பாடும் இல்லை. வன்முறையில்லாமல் அவர்கள் போராட்டம் நடத்தும் வரை, அந்தப் போராட்டத்தைக் குறை கூற முடியாது என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பது தொடர்பாக எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் முதலமைச்சரே நேரில் வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறையோ அவசியமோ கிடையாது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ அல்லது அவையின் முன்னவரோ பதில் அளிப்பதுதான் வழக்கமான இயல்பான நடைமுறை. உதாரணமாக, மேகதாட்டு அணை விவகாரத்தில், ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் ஏற்கனவே தனது உறுதியான நிலையைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். 

முன்னதாக, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஏகவசனத்திலும், பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசிய குற்றச்சாட்டிற்காக விளாத்திக்குளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link