பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மும்பையின் ஜுஹூ பகுதியில் இருந்து வெளியே வந்த அவர் தனது காரில் ஏறிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் நல்வாய்ப்பாக அவர் மீது துப்பாக்கி குண்டு படாமல் உயிர் தப்பினார். மாறாக, அவரின் வாகன ஓட்டுநர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 15 தனிப்படை குழுவை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் மூவரும் ராஜஸ்தானில் பதுங்கியிருந்ததாகத் தகவல் கிடைத்தது. அதன்படி ராஜஸ்தானில் அவர்களை கைது செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னணி யார் இருக்கிறார்கள்? கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பதாகத் தெரிவித்திருந்தது. இது குறித்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளதாவது, ‘டைகர் ஷெராஃப்புக்கு தொலைப்பேசி வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அவர் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அவருக்கு புரியும் மொழியில் தெளிவாக விளக்கமளித்துள்ளோம். எனவே இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு, சல்மான் கான் வீட்டில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
