கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா மற்றும் ஈரானிடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்த மோதலின் காரணமாக இரு தரப்பிலும் கடுமையான பொருளாதார மற்றும் உயிர் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும், இந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.
இருப்பினும், கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்குமிடையிலான போரின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், சமீபத்தில் ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பெரிய அளவிலான ரணுவ நடவடிக்கையை (எபிக் பியூரி) மேற்கொள்ளலாம் அல்லது அவர்களே உடன்பாட்டிற்கு வரலாம். ஒருவேளை ஈரான் அறிவுப்பூர்வமாகச் செயல்பட்டால், அவர்கள் நிச்சயம் உடன்பாட்டிற்கான பேச்சு வார்த்தையைத் தொடங்க தயாராக இருப்பார்கள்” என்று பேசினார். ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என மறைமுகமாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு முன்பாக, இந்த வார இறுதிக்குள் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தூதர் டாம் பாரக் தெரிவித்த சில மணி நேரங்களில் அதிபர் ட்ரம்ப் இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. அதாவது, அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், வளைகுடா பகுதியில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே கடலுக்கு அடியில் செல்லும் 7 முக்கிய இணைய மற்றும் தகவல் தொடர்பு கேபிள்களை துண்டிக்க ஈரான் தயாராக உள்ளதாக அந்நாட்டின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஈரான் உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ”இனி எந்த எல்லைகளும், கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்படாது. அதனால், நெருப்புடன் விளையாட வேண்டாம்” என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிகைகளைத் தொடர்ந்து மீண்டும் மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
