நெல்லை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் மொத்தம் 37 ஆயிரத்து 877 பேர் பட்டம் பெற உள்ளதாகவும், கவர்னர் அர்லேகர் நேரடியாக 871 பேருக்குப் பட்டங்களை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் பட்டமளிப்பு விழாவில் 871 பேருக்கு நேரடியாகப் பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம் பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே கவர்னர் நேரடியாகப் பட்டங்கள் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னரிடம் நேரடியாகப் பட்டங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் வந்த மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு
இதனால் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்கலை., நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கவர்னரே அனைவருக்கும் பட்டம் வழங்குவார் என்றும் கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்தார். இதனால் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சுமார் 45 நிமிடம் தாமதமாக பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு
இதைபோல தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
