நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திடீரென பனிப்பாறை உடைந்து விழுந்ததால், போடே கோஷி நதியில் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த இயற்கைச் சீற்றம் நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மற்றும் சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்
குறிப்பாக நதிக்கரையை ஒட்டியிருந்த பல கிராமங்களும் சிறு நகரங்களும், இந்த வெள்ளத்தில் அடியோடு அடித்துச் செல்லப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயின. திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 1,355 ஆக அதிகரித்துள்ளது.
வடியாத வெள்ளம் : சென்னை எப்படி சமாளிக்கிறது?
பேரழிவு ஏற்பட்டு 13 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று நேபாளத்தில் தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது. 589 வெளிநாட்டினர் உட்பட காணாமல் போன 4,996 பேரைத் தேடும் தீவிரப் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் மீட்பு பணிகள்
இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 13,396 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலும் தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
மேலும், நேபாள சீன எல்லையில் போடே கோஷி நதியில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது நிலநடுக்கத்தின் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சீன ஆய்வாளர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே காரணம்
இது குறித்து சீன ஆய்வாளர்கள் கூறியிருப்பதாவது: கடந்த 60 ஆண்டுகளில் திபெத்திய பீடபூமிப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் சுமார் 24 சதவீதம் அளவுக்குச் சுருங்கியுள்ளதாகவும், ஏறத்தாழ 7,000 சிறிய பனிப்பாறைகள் முற்றிலும் மறைந்துவிட்டதாகவும் சீன தேசிய பருவநிலை மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புவி வெப்பமயமாதல் காரணமாக உயர் மலைப் பகுதிகளில் நிலவும் பனிக்கட்டிகளின் நிலைத்தன்மை குறைந்து வருகிறது. இதனால் மலைச்சரிவுகளில் பனி மற்றும் பாறைகள் சரிந்து விபத்துகள் ஏற்படுவது மேலும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளுக்கு ‘வார்னிங்’ கொடுக்கும் பேரழிவு
பனிப்பாறை சரிவு என்பது வெறும் தொடக்கப் புள்ளி மட்டுமே. அது மலையிலிருந்து கீழ்நோக்கி வரும்போது பள்ளத்தாக்கில் உள்ள பாறைகள், மண் மற்றும் நீருடன் கலந்து அதிவேக சேற்று வெள்ளமாக மாறுவதால், அது ஏற்படுத்தும் பாதிப்பு பல மடங்கு அதிகமாகிறது எனச் சீன அறிவியல் அகாடமி எச்சரித்துள்ளது.
எனவே, ஆபத்து மதிப்பீடுகளைச் செய்யும்போது பனிப்பாறை உடைவதை மட்டும் பார்க்காமல், அது பள்ளத்தாக்குகளில் ஏற்படுத்தும் தொடர் தாக்கங்களையும் (Cascading effects) கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுரங்கப்பாதைகளில் தொடரும் தேடுதல் வேட்டை
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயங்கி வந்த நீர்மின் திட்டப் பகுதிகளில் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள சுரங்கப்பாதைகளுக்குள் நூற்றுக்கணக்கான பணியாளர்களும் பொதுமக்களும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அடர்ந்த சேறும் நீரும் சூழ்ந்துள்ள இந்த ஆபத்தான பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, நேபாள நிபுணர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுவினரும் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
