நேபாள தேசிய அடையாள அட்டை அங்கீகரிக்க இந்தியாவுக்கு கோரிக்கை

காத்மாண்டு: ‘நேபாள தேசிய அடையாள அட்டையை, இந்தியாவில் செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க வேண்டும்’ என, மத்திய அரசிடம் நேபாளம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டுக்கு விமானத்தில் வருவதற்கு, பாஸ்போர்ட் அல்லது குடியுரிமை சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், நேபாளத்தின் தேசிய அடையாள அட்டையையும் பயண ஆவணமாக அங்கீகரிக்குமாறு, நம் அரசுக்கு நேபாளம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, நேபாள குடியேற்ற துறை செய்தி தொடர்பாளர் டிகா ராம் தாகல் கூறியதாவது:

நேபாள தேசிய அடையாள அட்டையை செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்கக் கோரி, இந்தியாவுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், பாஸ்போர்ட், குடியுரிமை சான்றிதழுடன், தேசிய அடையாள அட்டையும் செல்லுபடியாகும் மூன்றாவது ஆவணமாக அமையும். இதற்கு இந்திய அரசு விரைவில் சாதகமான பதில் அளிக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய 500 ரூபாய்க்கு நேபாளத்தில் அனுமதி இந்தியாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, 100 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட இந்திய கரன்சி நோட்டுகள் நேபாளத்துக்குள் நுழைவதற்கும், பயன்படுத்துவதற்கும் அந்நாடு தடைவிதித்தது. நேபாளம் செல்லும் பயணியர் 100 மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்தது. இந்நிலையில், நேபாள மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய மற்றும் நேபாள மக்கள், 200 மற்றும் 500 ரூபாய் இந்திய நோட்டுகளை 25,000 ரூபாய் வரை விதிகளுக்கு உட்பட்டு வைத்திருக்கலாம்’ என தெரிவித்துள்ளது.

Source link