புதுடெல்லி
நைஜீரியா-கியூபா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 11-ந்தேதி தொடங்கி 3 நாட்களுக்கு 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விடுத்த அழைப்பின் பேரில் பல்வேறு நாடுகளின் அதிபர்களும், தலைவர்களும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மத்திய வெளிவிவகார துறைக்கான மந்திரி ஜெய்சங்கர், நைஜீரிய நாட்டின் வெளியுறவு மந்திரி பியாங்கா ஒடுமெக்வு-ஒஜுக்வு மற்றும் கியூபாவின் வெளியுறவு மந்திரி புரூனோ ரோட்ரிகிஸ் பர்ரில்லா ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், நைஜீரிய நாட்டின் வெளியுறவு மந்திரி பியாங்கா ஒடுமெக்வு-ஒஜுக்வுவை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் ஆகியவற்றை மையப்படுத்தி எங்களுடைய உரையாடல் இருந்தது என பதிவிட்டு உள்ளார்.
இதேபோன்று, கியூபாவின் வெளியுறவு மந்திரி புரூனோ ரோட்ரிகிஸ் பர்ரில்லாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன். தெற்கு பிராந்தியத்திற்கான ஒத்துழைப்பு பற்றிய கருத்துகளை பரிமாறிக்கொண்டோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
