டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4% பங்குகளை வைத்துள்ள ஷாபூர்ஜி பல்லோஞ்சி (SP) குரூப், அந்த ஹோல்டிங் நிறுவனத்தில் இருந்து பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ வெளியேறுவதற்கு நியாயமான விலையை (fair valuation) எதிர்பார்க்கிறது. மேலும், இதற்காகப் பங்குகளை திரும்பப் பெறுதல் (share buyback) அல்லது பங்குச் சந்தைப் பட்டியலிடுதல் (listing) ஆகிய இரண்டு வழிகளுக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக மிஸ்த்ரி குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் டாடா சன்ஸ் இடையே தலைவர் என்.சந்திரசேகரனின் மறுநியமனம் மற்றும் ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குச் சந்தைப் பட்டியலிடுதல் குறித்து எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளில் மிஸ்த்ரி குடும்பம் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலை வகிக்கிறது. தங்களது முதலீட்டின் பணத்தை எடுத்து, கடனைக் குறைப்பதே அவர்களின் முக்கிய முன்னுரிமையாகும்.
“மிஸ்த்ரி குடும்பம் ஒரு நியாயமான தீர்வையே விரும்புகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடுவது அல்லது டாடா சன்ஸ் மூலம் பங்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய இரண்டிற்கும் குடும்பம் தயாராக உள்ளது” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், எஸ்பி குரூப் இரு தரப்பிலிருந்தும் சமமான தூரத்தை (‘equidistant’) பராமரித்து வருவதாகவும், அவர்களின் கருத்து வேறுபாடுகளில் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டாடா சன்ஸ் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ரூ.25,000 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறலாம் என்ற முன்மொழிவு கொண்டுவரப்பட்டது. டாடா டிரஸ்ட்ஸ் தலைவரான நோயல் டாடா தான் இந்த முன்மொழிவை முன்வைத்தார். இவர் எஸ்பி குரூப் தலைவர் ஷாபூர் மிஸ்த்ரியின் சகோதரியான அலூ மிஸ்த்ரியைத் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திட்டப்படி, எஸ்பி குரூப் டாடா சன்ஸின் 2-3% பங்குகளை விற்பனை செய்யும். 3% பங்கு விற்பனையின் மூலம் முன்மொழியப்பட்ட தொகை வழங்கப்பட்டால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு தோராயமாக ரூ.8.3 லட்சம் கோடியாக இருக்கும்.
இந்தத் தொகையை 18 மாத காலத்திற்குள் பிரித்து வழங்க எஸ்பி குரூப் எதிர்பார்க்கிறது. விற்பனை செய்யப்படும் பங்குகளின் சதவீதம் குறைந்தால் மதிப்பீடும் மாறுபடும்.
கடன் சுமையைக் குறைக்கத் திட்டம்
எஸ்பி குரூப்பின் கடன் சுமையைக் குறைக்க டாடா சன்ஸ் பங்குகளின் ஒரு பகுதியை பணமாக்குவது தற்போதைய அவசியமான தேவையாக மாறியுள்ளது. எஸ்பி குரூப்பின் மொத்தக் கடன் ரூ.55,000 முதல் ரூ.60,000 கோடி வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தக் கடன் சுமையைக் குறைப்பதற்காக எஸ்பி குரூப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:
ஒடிசாவின் கோபால்பூர் துறைமுகத்தில் இருந்த தனது பங்குகளை விற்பனை செய்தது.
உட்கட்டமைப்பு துணை நிறுவனமான அஃப்கான்ஸின் (Afcons) பொதுப்பங்கு வெளியீட்டை (IPO) மேற்கொண்டுள்ளது.
ஜூலை மாதத்தில், எஸ்பி குரூப் ரூ.21,500 கோடி மதிப்பிலான ரீஃபைனான்சிங் நடவடிக்கையை நிறைவு செய்தது. பெரும்பாலான கடன் வழங்கியவர்கள் புதிய நிதியளிப்பிற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பத்திரதாரர்களுக்கு ரூ.3,500 கோடியை எஸ்பி குரூப் திருப்பிச் செலுத்தியது. இந்த ஏற்பாடுகள் செப்டம்பரில் இருந்த முக்கியத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பைச் சமாளிக்கவும், கடன் தவறுதலைத் தவிர்க்கவும் மிஸ்த்ரி குடும்பத்திற்கு உதவியது.
அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அவசரக் கடன் திருப்பிச் செலுத்தும் கெடு எதுவும் இல்லாததால், டாடா சன்ஸ் பங்குகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர தற்காலிகமாகச் சிறிது அவகாசம் கிடைத்துள்ளது.
அடுத்தகட்ட நகர்வுகள்
பங்குகளைத் திரும்பப்பெறுதல் நடவடிக்கை (Buyback) மூலமாக டாடா சன்ஸ் நிறுவனத்தைப் உடனடியாகப் பங்குச் சந்தையில் பட்டியலிடாமலேயே எஸ்பி குரூப்பிற்குத் தேவையான நிதி கிடைக்கும். அதே சமயம், பங்குச் சந்தைப் பட்டியலிடுதல் (Listing) சந்தை சார்ந்த நியாயமான மதிப்பீட்டை நிர்ணயித்து பணமாக்குவதற்கான மற்றொரு வழியை வழங்கும்.
இந்த இரண்டு வழிகளுமே முறையான நிபந்தனைகள், கார்ப்பரேட் ஒப்புதல்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் (regulatory approvals) அனுமதியைப் பொறுத்தே அமையும். தற்போதைக்கு, நிர்வாகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், வணிக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவாக எட்ட வேண்டும் என்பதே மிஸ்த்ரி குடும்பத்தின் நிலைப்பாடாகும்.
