மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சராக பதவி வகித்து வந்த எல்.முருகன் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி திடீரென தனது மத்திய அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். 2029ஆம் மக்களவைத் தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தவும், தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்ப்பதற்கும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். 2030 வரை எம்.பி பதவிக் காலம் இருக்கும் நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.
மாநிலங்களவை எம்.பி பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேசத்தில் அந்த இடம் காலியானது. இதையடுத்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த மாநிலங்களவை இடத்துக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளா நிலையில், ஹர்தீப் சிங் புரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜினாமா செய்தது ஏன்? என முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியையும் ஒப்புதலையும் பெற்ற பிறகு, 13/10/2026 அன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும், மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்தும் விலகினேன். கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள தொண்டர்களை மேம்படுத்துவதற்காக எனக்கு வழங்கப்பட்டுள்ள தற்போதைய பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர், டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, தேவையற்ற மற்றும் இழிவான கருத்துகளை வெளியிட்டுப் பரப்பியுள்ளனர். இத்தகைய கருத்துகள் அவதூறானவை மட்டுமல்லாமல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
இந்தக் கூற்றுகள் ஆதாரமற்றவை, முற்றிலும் புனையப்பட்டவை, தீய நோக்கம் கொண்டவை மற்றும் அரசியல் உள்நோக்கம் வாய்ந்தவை. எனது கடின உழைப்பால் பெற்ற நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும், எனது ராஜினாமாவுக்குச் சில சாயங்களைக் கொடுப்பதற்காகப் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவதையுமே இவை ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளன. எனது ராஜினாமாவின் நோக்கம், 2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியைத் தயார்படுத்த, அடிமட்ட அளவில் உள்ள தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவது மட்டுமே ஆகும். அரசியல் உள்நோக்கமும் தீய எண்ணமும் கொண்ட சிலரால் முன்வைக்கப்படும் மற்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தேவையற்ற பிரச்சாரங்களும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை.
இதை அனுமதிக்க முடியாது. எனது ராஜினாமா குறித்து டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களையும், பதிவுகளையும், வெளியீடுகளையும் உடனடியாக நீக்குமாறு அவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எனது நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன், ஆதாரமற்ற, அடிப்படையற்ற மற்றும் தீய உள்நோக்கம் கொண்ட கருத்துகளை வெளியிட்டதற்காக, அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
