tசங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க ஆடித்தவசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் புகழ்பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமான சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஹரியும் சிவனும் ஒன்றே. வைணவமும் சைவமும் ஒன்றே என்ற ஒப்பற்ற அரிய தத்துவத்தை மோதிக் கொண்டிருந்த சைவ விஷ்ணு பக்தர்களுக்காக உணர்த்தும் பொருட்டு, ஆதி சிவபெருமான், தன் உடலில் இடதுபாகத்தை விஷ்ணுவாகவும் வலது பாகத்தை சிவனாகவும் ஒருசேர உருவெடுத்து இரு தரப்பு பக்தர்களையும் ஒற்றுமைப்படுத்தியதோடு பிரபஞ்சத்திற்கும் உணர்த்தியவர்.
இறைவன் பக்தர்களுக்கு காட்சியளித்த அந்த அரிய காட்சியை தனக்கும் அருள வேண்டும் என்று அன்னை ஸ்ரீபார்வதி தேவியான கோமதியம்பிகையும் தன் அரிய தவத்தால் காணப்பெற்றதோடு அன்னைக்கு சர்வேஸ்வரன் சக்தியையும் அருளிய மண் பொதிகையடியான சங்கரநாராயணர் கோவில் என்றழைக்கப்படும் சங்கரன்கோவில். சங்கரரும் நாராயணரும் ஒரு சேர தன் உடலில் கூடிய அவதாரமெடுத்ததால் ஸ்ரீ சங்கரநாராயணர் ஆலயம் என்றழைத்துப் போற்றப்படுகிறது என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாகவும், தவமிருக்கும் கோமதி அம்பாளுக்குச் சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணராகக் காட்சியளிக்கும் பெருமைமிக்க நிகழ்வே ஆடித்தவசு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க இத்திருவிழாவின் தொடக்கமாக, இன்று காலை 7 ஏழு மணி அளவில் திருக்கோயிலில் கோமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு விக்னேஷ்வர பூஜை, அனிக்கை பூஜை, ருத்ர ஜெபம், கலச பூஜை மற்றும் ருத்ர ஹோமம் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க ஆடித்தவசு திருவிழாவுக்கான கொடியேற்றம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, கொடிமரத்திற்கு 21 வகையான சிறப்புப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் 12 நாட்களும் தினமும் சுவாமி, அம்பாளுக்குச் சிறப்புப் பூஜைகளும் நடைபெறும். மேலும், ஒவ்வொரு நாளும் அந்தந்த மண்டகப்படிதாரர்கள் சார்பாக சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் மண்டபங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.
திருவிழாவின் 9ம் நாளான வரும் 26ம் தேதி கோமதி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளும் பிரசித்தி பெற்ற தேரோட்ட நிகழ்ச்சியும், திருவிழாவின் சிகர நிகழ்வான 11ம் திருவிழாவன்று 28ம் தேதி மாபெரும் ஆடித் தபசு திருவிழாவும் நடைபெற உள்ளன. இத்திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினரும், மண்டகப்படிதாரர்களும் இணைந்து செய்து வருகின்றனர். விழா நாட்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க 700 காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
