வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் பங்கேற்பதாக தகவல் வெளியானது. மேலும் அவரது வருகைக்காக ஹெலிபேட் அமைக்கும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் .இது குறித்த இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலைப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மருது சகோதரர்களின் நினைவு தினம்
செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரின் விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துப் பேசுகையில்:ஆர்.பி.உதயகுமார் போன்ற சுயநலவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட அதிமுக என்ற ஒரு மாபெரும் கட்சியையே சுவடில்லாமல் அழித்துவிட்டனர். தினமும் மாலை 3 அல்லது 4 மணிக்குத் தேநீர் குடிக்கும் நேரத்தில், வெறும் ‘டைம்பாஸ்’ செய்வதற்காகவே இவர்கள் செய்தியாளர்களைக் கூட்டி ஏதாவது ஒரு தவறான கருத்தைப் பேசி வருகின்றனர்.முதலில் ஆர்.பி.உதயகுமார் எந்த அதிமுகவில் இருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருக்கிறாரா, இல்லை டிடிவி தினகரனுடன் இணையப் போகிறாரா? அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்துடிடிவி தினகரனை மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக்க திட்டமிட்டுள்ளார்களா?என்பதை முதலில் முடிவெடுத்து மக்களுக்குத் தெரிவிக்கட்டும்என்று கடுமையாகச் சாடினார்.
கொள்கையில் ஒருபோதும் சமரசமில்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர்,கட்சியின் தொடக்க மாநாட்டிலேயே நம்முடைய தலைவர், கொள்கை எதிரி யார் என்பதை மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்துவிட்டார். தலைவர் வகுத்துக் கொடுத்த கொள்கையிலிருந்து எந்தவொரு சூழ்நிலையிலும், எந்த நெருக்கடி வந்தாலும் துளியளவும் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. கொள்கைப் பாதையில் தவெக எப்போதும் உறுதியாகவும் சமரசமின்றியும் பயணிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை” என்று தெரிவித்தார்.
மக்களுக்காக மட்டுமே மத்திய அரசுடன் பேச்சு
மத்திய அரசுடனான இணக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முதலமைச்சர் பதவியேற்ற முதல் நாளிலேயே கூறியதுபோல, அரசின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே இருக்கும். யாரையும் முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டு ரகசியமாகச் சந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களின் நலம் ஒன்றே எங்கள் அரசின் ஒரே நோக்கம்” எனக் குறிப்பிட்டார்.
தேவர் ஜெயந்தி & ஹெலிபேட் சர்ச்சை
தேவர் ஜெயந்திக்கு முதல்வர் வருகை மற்றும் ஹெலிபேட்அமைக்கப்படுவது குறித்துப் பரவி வரும் தகவல்களுக்கு விளக்கமளித்த அவர்:ஹெலிபேட் அமைப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இந்தியத் துணை குடியரசுத் தலைவரின் வருகைக்காகவே அங்கு ஹெலிபேட் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவர் ஜெயந்தி அன்று லட்சக்கணக்கான பொதுமக்கள் திரள்வார்கள்.
மேலும், அதே நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிகழ்வுகளும் இருப்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், மழைப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் கூடுதல் சாலைப் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பிறகே அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்; எனவே அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்றார்.
மின்துறை சீரமைப்பு மற்றும் நிலக்கரி கொள்முதல்
மாநிலத்தின் மின் விநியோக நிலை குறித்துப் பேசிய அமைச்சர், “கடந்த ஒரு வாரமாகவே மின்துறைப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முழுமையாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்யும் வகையில் நிலக்கரி கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) கோரப்பட்டுள்ளன. இன்னும் ஒருசில மாதங்களுக்குள் மின்துறை சார்ந்த அனைத்துப் பிரச்னைகளும் முற்றிலுமாகச் சரிசெய்யப்பட்டு அரசு மக்களுக்குச் சீரான சேவையை வழங்கும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
Source link
