சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மின்தூக்கிகள் (லிஃப்ட்) வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலம் நடைமேடைகளுக்கு இடையே மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிக உடைமைகளுடன் பயணம் செய்வோர் எளிதாகச் சென்று வர முடியும்.
எந்த நடைமேடைகளை இணைக்கின்றன?
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை 1 மற்றும் 2-ஐ இணைக்கும் வகையிலும், நடைமேடை 3 மற்றும் 4-ஐ இணைக்கும் வகையிலும் தலா ஒரு மின்தூக்கி அமைக்கப்பட்டுள்ளது. இவை புதிதாகக் கட்டப்பட்டுள்ள 8 மீட்டர் அகல நடைமேம்பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மின்தூக்கிகள் மூலம் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதில் சிரமம் உள்ள பயணிகள் எளிதாக நடைமேடைகளுக்கு இடையே செல்ல முடியும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
டிசம்பருக்குள் 10 நகரும் படிக்கட்டுகள்
தாம்பரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, புதிய நடைமேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் மேலும் 10 நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை 2026 டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமேம்பாலம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வராத நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் மற்ற நடைமேடைகளுக்குச் செல்வதற்கு உதவியாக நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் சக்கர நாற்காலிகளும் வைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் கோரிக்கை
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் வசதிக்காக பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், புதிய நடைமேம்பாலத்தை அடைவதற்கான அணுகுபாதைகள் மற்றும் நிலையத்தைச் சுற்றியுள்ள பயணிகள் நடமாட்டப் பகுதிகளில் இன்னும் சில பணிகள் முழுமையடையவில்லை எனப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப் பணிகளையும் விரைந்து முடித்தால்தான் புதிய வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
