புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் (என்டிஏ) பழைய கூட்டணிக் கட்சியாக இருந்தது சிரோமணி அகாலி தளம். கடந்த 1996 முதல் 2020 வரை பஞ்சாபில் அகாலி தளம், பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டும் வந்தது. இக்கூட்டணிக்கு 2007 மற்றும் 2012 தேர்தலில் தொடர்ந்து வெற்றி கிடைத்து இருமுறை ஆட்சி அமைந்தது. 2020-ல் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலி தளம் கூட்டணியிலிருந்து விலகியது.
இந்நிலையில், இருகட்சிகளும் மீண்டும் பஞ்சாபில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் கிட்டத்தட்ட ஒரு உடன்பாட்டுக்கு வந்துவிட்டன. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் பஞ்சாப் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு என்டிஏ ஆட்சி அமையும் என்று கூறி இருந்தார். இதன் மூலம், மீண்டும் பாஜக, அகாலிதளம் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. தனித்தனியாகப் போட்டியிட்டுப் பார்த்ததில், அது இரு கட்சிகளுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தியது என்பதை உணர்ந்துகொண்டதால், மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
2024 மக்களவைத் தேர்தலில், 45 தொகுதிகளில் அகாலி தளத்தைவிட பாஜக முன்னிலையில் இருந்தது. இதனால், மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 35 முதல் 45 தொகுதிகளில் பாஜக போட்டியிடக்கூடும். மீதமுள்ள தொகுதிகளில் அகாலி தளமும் பிற சிறிய கட்சிகளும் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் அகாலி தளம் மற்றும் பாஜகவின் ஒருங்கிணைந்த வாக்கு வங்கி சுமார் 40 லட்சமாக உள்ளது.
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் 65.38 லட்சம் (42%) வாக்குகளுடன் 92 தொகுதிகளைப் பெற்றது. காங்கிரஸுக்கு 22.98 சதவிகிதமாக 35.76 லட்சம் வாக்குகள் கிடைத்தன. இது, 2024 மக்களவைத் தேர்தலில், ஆம் ஆத்மிக்கு 26.30, காங்கிரஸுக்கு 26.02 சதவிகிதமாகக் குறைந்தன. இந்தத் தரவுகளின்படி, மும்முனைப் போட்டி ஏற்பட்டால் பாஜக-அகாலி தளம் கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என கருதப்படுகிறது.
