”பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை”; தீவிர சோதனையில் இறங்கிய பாதுகாப்பு படை

நவம்பர் 8 அன்று தீபாவளி வரவுள்ள நிலையில், கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே, புத்தாடைகளை வாங்குவது, சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்ட முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.  

இந்நிலையில், தெற்கு ரயில்வே காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயிலில் பட்டாசு அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு சென்றால், ரயில்வே சட்டம் 164-ன் படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆகியவை எச்சரித்துள்ளன.  

மேலும், ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தால் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.