பணி நியமன முறைகேடு புகார்: கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை

திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கட்டடங்கள் கட்டுதல், கழிப்பறைகள் அமைத்தல், பணி நியமனங்களை அவுட்சோர்சிங் முறையில் மேற்கொள்ளுதல் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமார் 1020 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எழுப்பியது. இதில், ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் 7.5 முதல் 10 சதவீதம் வரையிலும், ஒப்பந்ததாரர்களிடம் 20 முதல் 25 சதவீதம் வரையிலும் லஞ்சமாகப் பெறப்பட்டதாக அமலாக்கத்துறையின் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் புதிய வழக்கைப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி கே.என்.நேருவுடன் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை நடத்தியது. அந்த சோதனைகளின் போது 241 முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சான்றுகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கே.என்.நேருவின் இல்லத்திற்கு இன்று அதிகாலை வருகை தந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையைத் தொடங்கியுள்ளனர். அதே வேளையில், சென்னையில் உள்ள அவருடைய சகோதரரின் இல்லம் மற்றும் அலுவலகங்கள் உட்பட பல இடங்களிலும் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப்பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Source link