பண மோசடி தொடர்பான வழக்கு : தொழிலதிபர் சண்முக பிரியா வீட்டில் சோதனை!

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் நேற்று முன்தினம் (26.10.2026) மாலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கு அன்பில் மகேஷுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்குப் பின்னர் அன்பில் மகேஷ் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து அன்று இரவே, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பாக அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். இத்த உத்தரவைத் தொடர்ந்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, சென்னை பெருங்குடியில் உள்ள சண்முகப்பிரியா என்ற தொழிலதிபரின் வீட்டில் இன்று (28.11.2026) காலை 11.45 மணி முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர். சுமார் நான்கு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது.

இந்த வழக்கில், ஏதேனும் ஆவணங்கள் கிடைக்குமா என்ற அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சோதனையின்போது என்னென்ன ஆவணங்கள் அல்லது ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம் இந்தச் சோதனையில் என்னென்ன தகவல்கள் கிடைத்துள்ளன, என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, உரிய தகவல்கள் குறித்து தலைமை அலுவலகம் வாயிலாகத் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்த்ள்ளனர்.