தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி (18.07.2026) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று (20.07.2026) காலை 5 மணி அளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் வருகை தந்தனர். காலை 6 மணி அளவில் போலீசார் ஜீ. வி. மார்க்கண்டேயனை அதிரடியாகக் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடைபெற்ற 9 மணிநேர விசாரணைக்கு பின் நேற்று இரவு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை “ரவுடிகள்” எனக் கூறி ஏடிஎஸ்பி மிரட்டியுள்ளார். இதனால் ஏடிஎஸ்பி தீபு மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது ஏடிஎஸ்பி திபு “ஏங்க… அதுக்கு ரிப்போர்ட்டர்களா? ரவுடிகளா?. முதல்ல ரிப்போர்ட்டர் எப்படி ஒழுக்கமா இருக்கணும்னு தெரிஞ்சுக்கோங்க. கத்திக்கிட்டு வாதீங்க” எனக் கோபாமாக கேட்டுள்ளார். அதற்கு பத்திரிகையாளர்கள், “சார், அது எங்களுக்கு தெரியும் சார். அதை நீங்க சொல்ல வேண்டாம்” எனப் பதிலளித்தனர். மேலும் ஏடிஎஸ்பி தீபு ‘வாங்கடே.. வாங்க.. பார்த்துக் கொள்வோம்’ என ஆவேசமாக அவர் மிரட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம் மருத்துவப்பரிசோதனைக்கு பின் நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக போலீசார் தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
