எழுதியவர் – நிகிலா ஹென்றி
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் (SVP NPA) பயிற்சி பெற்று வந்த ஐ.பி.எஸ் அதிகாரி, எம் உதய் கிருஷ்ணா ரெட்டி என்ற மற்றொரு பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், உதய் கிருஷ்ணா தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹரித்வாரில் கொடூரம்: தோழியின் வீட்டிற்கு சென்ற முஸ்லிம் இளைஞர்; நாய் போல் கட்டி வைத்து மர்ம கும்பல் தாக்குதல்
முன்னதாக, உதய் கிருஷ்ணா ரெட்டி மீது பெண் அதிகாரியைப் பின் தொடருதல், தாக்குதல், குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், உதய் கிருஷ்ணா ரெட்டி இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து வந்தார். இந்த சூழலில் தான், திங்கள்கிழமை அன்று ஹைதராபாத்தில் உள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கான்ஸ்டபிள் டூ ஐ.பி.எஸ் – சந்திரபாபு நாயுடு பாராட்டிய அதிகாரி
ஆந்திரப் பிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்த உதய் கிருஷ்ணா ரெட்டி, 2019-ல் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினார். கடின உழைப்பிற்குப் பின் 2024-ல் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியானார். ஒரு சாதாரண கான்ஸ்டபிளாக இருந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக உயர்ந்த இவரது சாதனை செய்தித் தாள்களில் வெளியாகிப் பேசப்பட்டதுடன், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவும் இவரை நேரடியாக அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலைக்கு முன் எழுதிய அதிர்ச்சி கடிதம்
திங்கள்கிழமை விஷம் அருந்துவதற்கு முன்பாக உதய் கிருஷ்ணா ரெட்டி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், புகாரளித்த பெண் அதிகாரி “தன்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்” என்றும், வேறு இரண்டு பயிற்சி அதிகாரிகள் தூண்டிவிட்டதன் காரணமாகவே தன் மீது பொய்யான புகாரை அளித்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டபோது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் மீதான புகார்களும் வதந்திகளும் முற்றிலும் ஆதாரமற்றவை. சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நீதி வெல்லும்” என்று பதிவிட்டிருந்தார். மேலும் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில், “அவர் அனைத்தையும் தவறாக சித்தரித்து நான் அவரைத் தாக்கியதாகக் கூறியுள்ளார், அது உண்மை அல்ல” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த திடுக்கிடும் புகார்
பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த புகாரில், ஜூன் 23 முதல் உதய் கிருஷ்ணா ரெட்டி தனக்கு வாட்ஸ் அப்பில் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பித் தொந்தரவு செய்ததாகவும், அகாடமியில் உள்ள மற்ற பயிற்சி அதிகாரிகளுக்கு முன்னால் தன்னை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஜூலை 9 அன்று என்னை நகர விடாமல் தடுத்து, வலுக்கட்டாயமாகத் தனது அறைக்கு இழுத்துச் சென்று, எனது முடியைப் பிடித்து கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றார். மேலும் கத்தியை எனது கழுத்தில் வைத்து அறையை விட்டு வெளியேற விடாமல் தடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 10 அன்று மீண்டும் தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ள அவர், “எனது அனுமதி இன்றி ஒரு தனிப்பட்ட வீடியோவை பதிவு செய்து, என்னை மிரட்டுவதற்காக எனது கணவருக்கு அனுப்பினார்” என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அதிகாரி உதய் கிருஷ்ணா ரெட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
