– அர்ஜூனமூர்த்தி –
மாநில தலைவர்,பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, அதன் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், சாலைகள் அல்லது மின்உற்பத்தி திறனை மட்டுமே சார்ந்தது அல்ல. உலக பொருளாதாரத்துடன், அந்த மாநிலத்தை இணைக்கும் சர்வதேச விமான நிலையங்களே, இன்று முதலீடு, தொழில், ஏற்றுமதி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பின் முக்கிய நுழைவாயிலாக மாறியுள்ளன.
ஒரு காலகட்டத்தில் தென்மாநிலங்களின் முக்கிய சர்வதேச நுழைவாயிலாக இருந்த சென்னை, இன்று அந்த இடத்தை பெங்களூரு மற்றும் ஹைதராபாதிடம் படிப்படியாக இழந்து வருகிறது. இது, வெறும் பயணியர் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமல்ல; நீண்டகால உள்கட்டமைப்பு திட்டமிடலில் ஏற்பட்ட பின்னடைவை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறி.
கடந்த, 2025- – 26ம் நிதியாண்டில் பெங்களூரு விமான நிலையம், 44.47 மில்லியன் பயணியரையும், ஹைதராபாத் விமான நிலையம், 34 மில்லியன் பயணியரையும் கையாண்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையம், 23.02 மில்லியன் பயணியரை மட்டுமே கையாண்டுள்ளது.
அத்துடன், 2019- – 20 முதல், 2025- – 26 வரையிலான காலகட்டத்தில், சென்னை விமான நிலையத்தின் பயணியர் வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது.
ஓடுபாதைகள்
இதேகால கட்டத்தில், பெங்களூரும், ஹைதராபாத்தும் உலக தரத்திலான புதிய முனையங்கள், இணை ஓடுபாதைகள், சரக்கு மையங்கள், பராமரிப்பு வசதிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான விரிவான கட்டமைப்புகளை உருவாக்கி, சர்வதேச விமான நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளன.
இதில், முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது, ஒரு விமான நிலையத்தின் வெற்றி, அதன் கட்டடத்தின் அழகால் தீர்மானிக்கப்படுவதில்லை.
இன்று ஒரு சர்வதேச விமான நிறுவனம் எந்த நகரத்திற்கு சேவையை விரிவுபடுத்துவது என, முடிவு செய்யும் போது, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அளவுகோல்களை மதிப்பீடு செய்கிறது.
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பான, ஐ.சி.ஏ.ஓ., மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான, ஐ.ஏ.டி.ஏ., பரிந்துரைக்கும் பாதுகாப்பு தரநிலைகள், ஓடுபாதை திறன், விமான நிறுத்துமிடங்கள், பயணியர் முனையத்தின் செயல்திறன், நவீன விமான போக்குவரத்து மேலாண்மை, விரைவான தரை சேவைகள், சரக்கு வசதிகள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மையங்கள், டிஜிட்டல் செயல்முறைகள், பாதுகாப்பு மற்றும் குடியேற்ற வசதிகள் போன்ற அனைத்தும், ஒரு விமான நிலையத்தின் போட்டித்திறனை நிர்ணயிக்கின்றன.
மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தரநிலைகளுக்கு ஏற்ப, எதிர்காலத்தில் அமெரிக்க விமான நிறுவனங்களின் நேரடி சேவைகளை ஈர்க்கவும், விரிவுபடுத்தவும், உலக தரத்திலான விமான நிலைய உள்கட்டமைப்பும், மேம்பட்ட விமான போக்குவரத்து மேலாண்மையும், போதுமான விரிவாக்க திறனும் அவசியமாகும்.
இதற்காக நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்யும், புதிய தலைமுறை விமான நிலைய கட்டமைப்பை தமிழகம் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விமானம் தரையிறங்கிய பின், மீண்டும் புறப்படுவதற்கான நேரம் குறைவாக இருந்தால், விமான நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சேமிப்பாகிறது.
இதுவே, உலகின் முன்னணி விமான நிறுவனங்கள், தங்களது மையம் அல்லது செயல்பாடுகளை தேர்ந்தெடுக்கும் போது முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது.
உலகத்தரம்
சென்னை விமான நிலையத்தில், எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் தற்போது சேவைகளை வழங்குகின்றன.
ஆனால், புதிய வழித்தடங்கள், அதிக சேவைகள் மற்றும் பெரிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால், உலக தரத்திலான விரிவாக்க வசதிகள் அவசியம்.
நகர வளர்ச்சியால் சூழப்பட்ட தற்போதைய சென்னை விமான நிலையத்திற்கு, இயற்கையாகவே நிலப்பரப்பு வரம்புகள் உள்ளன. எதிர்கால தேவைகளை அது முழுமையாக பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுகிறது.
மாறாக, பெங்களூரு இன்று இரண்டு இணை ஓடுபாதைகள், உலக தரத்திலான டெர்மினல் 2, ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் போன்ற நிறுவனங்களின் முக்கிய மையம், டி.எச்.எல்., மற்றும் பெட் எக்ஸ் போன்ற சரக்கு சேவைகள், பெரிய எம்.ஆர்.ஓ., வசதிகள் போன்றவற்றுடன் முழுமையான விமான பொருளாதார மையமாக உருவெடுத்து வருகிறது.
ஹைதராபாத், அமேசான் ஏர், புளூ டர்ட், அலையன்ஸ் ஏர் போன்ற நிறுவனங்களின் சரக்கு மற்றும் செயல்பாட்டு மையமாக வளர்ந்து, தொடர்ந்து புதிய சர்வதேச இணைப்புகளை ஈர்த்து வருகிறது.
இந்த வேறுபாடு வெறும் விமான துறையை மட்டுமல்ல, தொழில் முதலீடுகளையும் தீர்மானிக்கிறது. உலகின் எந்த பெரிய நிறுவனமும் ஒரு தொழிற்சாலை அல்லது பிராந்திய தலைமையகத்தை அமைக்கும் போது, அங்கு உலக தரத்திலான விமான இணைப்பு இருக்கிறதா என்பதையே முதலில் ஆராய்கிறது.
அதனால் தான், விமான நிலையங்களை சுற்றி, ‘லாஜிஸ்டிக் பார்க், வேர்ஹவுசிங் மண்டலங்கள், ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ்’ மற்றும் மாநாட்டு மையங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் என, முழுமையான பொருளாதார வளையங்கள் உருவாகின்றன. இதுவே, ஏரோடிரோபொலிஸ் எனப்படும் நவீன நகர வளர்ச்சி மாதிரியாகும்.
இதற்கு உலகமே சாட்சியாக உள்ளது. ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்த துபாய், இன்று உலக வர்த்தக வரைபடத்தில் முன்னணியில் இருப்பதற்கு, துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை மையமாகக் கொண்டு வளர்ந்த, எமிரேட்ஸ் ஏர்லைன்சும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
போக்குவரத்து மையம்
அதைப்போலவே, நிலப்பரப்பு குறைவாக இருந்தாலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை, உலகின் சிறந்த விமான நிலையமாக உருவாக்கிய சிங்கப்பூர், இன்று ஆசியாவின் முக்கிய வணிக மற்றும் போக்குவரத்து மையமாக திகழ்கிறது.
விமான நிலையம் என்பது, வெறும் பயணியர் வசதிக்கான கட்டடம் அல்ல; அது ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் சக்தி என்பதையே, இந்த எடுத்துக்காட்டுகள் நிரூபிக்கின்றன.
இந்தப் பின்னணியில் பரந்துார் பசுமை விமான நிலைய திட்டத்தையும் அணுக வேண்டிய அவசியம் உள்ளது. இந்தத் திட்டம் வெறும் புதிய விமான நிலையம் கட்டும் முயற்சியல்ல; தமிழத்தின் அடுத்த, 50 ஆண்டுகளுக்கான பொருளாதார உள்கட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்பாகும்.
பரந்துார் விமான நிலைய திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அரசியல் சக்திகளில் தற்போதைய ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் ஒன்று.
எதிர்க்கட்சியாக இருந்த போது எடுத்த நிலைப்பாடுகள், அரசியல் ரீதியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள்.
ஆட்சியின் பொறுப்பு என்பது கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளை நிரந்தரமாக பாதுகாப்பது அல்ல; மாறாக, மாநிலத்தின் நீண்ட கால நலனை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதாகும்.
நிலம் கையகப்படுத்துதல் என்பது, எந்தப் பெரிய உள்கட்டமைப்பு திட்டத்திலும் சவாலாகவே இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலைகள், அணைகள், ரயில்வே, துறைமுகங்கள், தொழிற்பூங்காக்கள் என, எந்தத் திட்டத்திலும் இதே கேள்விகள் எழுந்துள்ளன.
அதற்கான தீர்வு, வளர்ச்சியை நிறுத்துவது அல்ல; பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் சந்தை மதிப்பை விட உயர்ந்த இழப்பீடு, மாற்று வாழ்வாதாரம், திறன் மேம்பாட்டு பயிற்சி, குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான மறுவாழ்வு வசதிகள் போன்றவற்றை உறுதி செய்வதே சரியான அணுகுமுறையாகும்.
விரிவடைந்து
இன்று இந்தியாவில் விமான போக்குவரத்து உள்கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஒரு தசாப்தத்தில் நாட்டில் விமான போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் செயல்பட்டு, விமான நிலையங்களின் எண்ணிக்கையை, 74-ல் இருந்து, 160-க்கும் மேல் உயர்த்தியுள்ளது.
உடான் திட்டத்தின் மூலம் நுாற்றுக்கணக்கான புதிய விமான வழித்தடங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த தேசிய வளர்ச்சியுடன் தமிழ்நாடும் இணைந்து செல்ல வேண்டுமெனில், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலக தரத்திலான புதிய விமான நிலையம் அவசியமாகும்.
உற்பத்தி, கல்வி மற்றும் தொழில் துறையில், நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. ஆனால், உலகத் தரத்திலான விமான உள்கட்டமைப்பு இல்லாமல், அந்த முன்னிலை நீண்ட காலம் நிலைத்திருக்காது.
முதலீடுகள் காத்திருக்காது; விமான நிறுவனங்கள் காத்திருக்காது; உலகப் போட்டியும் காத்திருக்காது.
இன்று தேவைப்படுவது அரசியல் பிடிவாதமல்ல, தொலைநோக்கு பார்வை. பரந்துார் விமான நிலைய திட்டம் குறித்து, அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, விவசாயிகளின் உரிமைகளை முழுமையாக பாதுகாத்து, நியாயமான மறுவாழ்வு மற்றும் இழப்பீட்டு திட்டங்களுடன் செயல்படுத்துவது, தமிழகத்தின் பொருளாதார எதிர்காலத்திற்கான முதலீடாகும்.
ஒரு விமான நிலையத்தை நாம் கட்டவில்லை; அடுத்த தலைமுறைக்கான பொருளாதார எதிர்காலத்தை உருவாக்குகிறோம். அரசியல் நிலைப்பாடுகள் காலத்தோடு மாறலாம்.
ஆனால், தவற விடப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகள் மீண்டும் திரும்பி வராது. தமிழகம் போட்டியிட வேண்டியது அரசியல் மேடையில் அல்ல; உலக பொருளாதார மேடையில்.
அந்தப் போட்டியில் வெல்ல, உலக தரத்திலான விமான உள்கட்டமைப்பு இனி ஒரு விருப்பமல்ல; காலத்தின் கட்டாயமாகும். பரந்துார், பறந்துார் ஆகுமா?
