பரந்தூர் ஏர்போர்ட் திட்ட டி.ஆர்.ஓ., இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த, டி.ஆர்.ஓ., எனப்படும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், 5,300 ஏக்கர் பரப்பளவில், விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிய போது, தவெக தலைவர் விஜய், அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பரந்தூரில் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பரந்தூர் விமான நிலைய பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நில எடுப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கான நில எடுப்பு பணிக்காக, மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், வருவாய் துறையினர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், விமான நிலைய திட்டத்தின், முதலாவது மண்டல மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயலராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, நில எடுப்பு பணிக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் யாரும் நியமிக்கப்படவில்லை.

Source link