”பறவைக்காய்ச்சல் எதிரொலி”; வண்டலூர் உயிரியல் பூங்கா தற்காலிக மூடல்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு ‘பறவைக் காய்ச்சல்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரு நாள்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  

வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகளுக்கு ’எச்5என்1’ வகை பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பதை ’தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனம்’ கடந்த புதன்கிழமை (21-10-26) உறுதி செய்தது. 

இதையடுத்து, பறவைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இந்நிலையில், இந்த தொற்று பரவலைத் தடுக்க உயிரியல்  பூங்கா இன்று மற்றும் நாளை (அக்டோபர்- 22,23) ஆகிய இரு நாள்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.