பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி; முதல்வர் விஜய் பரிசீலனை

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது தொடர்பாக முதல்வர் விஜய் பரிசீலனை செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தமிழக அரசும், தமிழக வெற்றிக் கழகமும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் எப்போதும் முதன்மை அளிக்கும். கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இது மாறி இருக்கலாம். ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போதே, கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகத்தான் பாடப்பட்டது.

முதல்வர் விஜய்யிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அதற்கான தரவுகளையும் வழங்கியுள்ளேன். நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையை சீர்படுத்துவது, சத்துணவுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.11.50 தான் வழங்கப்படுகிறது.

இப்போது ஒரு மேகி பாக்கெட்டே ரூ.10க்கு விற்கப்படுகிறது. ரவை உப்புமா, கோதுமை உப்புமாக்களில் இருந்து குழந்தைகளுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது என்பது தெரியவில்லை. எனவே, காலை உணவை ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், அருசுவை நிறைந்த உணவாகவும் மாற்ற முடிவு செய்துள்ளோம்.

நீதிக்கட்சி உணவை கொண்டு வந்தது. காமராஜர் ஆட்சி அதை மதிய உணவாக மாற்றியது. கருணாநிதி முட்டை கொண்டு வந்தார். எம்ஜிஆர் அதனை சத்துணவாக மாற்றினார். ஜெயலலிதா வாரந்தோறும் முட்டை கொண்டு வந்தார். இது மாதிரி பல மாற்றங்கள் இருந்தன.

அதுபோல எனக்கும் ஒரு ஆசை வந்தது. வாரத்தில் ஒரு முறை சிக்கன் பிரியாணி போடலமாமே என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளேன். அது பலதுறைகள் சம்பந்தப்பட்டது. முதல்வர் இது குறித்து பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link