திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தடாபட்டு கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் – ஜோதி தம்பதியினரின் மகள்களான மகாலட்சுமி, பத்தாம் வகுப்பும், மகேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளின் பெற்றோர் இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் , இந்த மாணவிகள் இருவரும் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் உறவினரின் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல், அவர்களது உறவினரான தடாபட்டு கிராமத்தைச் சேர்ந்த நித்யா என்ற மாணவியும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி தனது பாட்டி உண்ணாமலையின் பாதுகாப்பில் வசித்து வருகிறார். நித்யாவின் பெற்றோரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். மூன்று பள்ளி மாணவிகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்துவரும் 6, 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்கள் 3 பேர் மாயமாகியுள்ளதாக ஒமலூர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓமலூர் டவுன் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
