திண்டுக்கல்: பழநியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் நேற்று சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாக பத்திரப் பதிவானது தொடர்பான புகாரின்பேரில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிமுருகதாஸ் உள்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நேற்று காலை 10 மணியளவில் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மடத்தின் நிலத்தை பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அஜய்தங்கம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து 7 மணிநேரம் விசாரணை நடந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேல் அவரை அங்கிருந்து சிபிசிஐடி போலீஸார் அனுப்பிவைத்தனர். மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
