பழனி கோயில் நில வழக்கு: ‘விமர்சனம் பொது அமைதிக்கு எதிரானது அல்ல’… யூடியூபருக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்

ஜனநாயக ஆட்சியில் மாற்றுக்கருத்து மற்றும் எதிர்ப்புக் குரல்கள் மதிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தையோ அல்லது அமைச்சர்களையோ வெறும் விமர்சனம் செய்வதை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகக் கருத முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அரசியல் விமர்சகரும் யூடியூபருமான வினோத் சூர்ய குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான நில மோசடி விற்பனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிற்கு தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக, வினோத் சூர்ய குமார் சைபர் க்ரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

வியாழக்கிழமையன்று யூடியூபருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் தனது உத்தரவில், ஒருவரைப் பற்றிப் தவறான அல்லது அவதூறானக் கருத்துகளைத் தெரிவிப்பது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 356-ன் கீழ் அவதூறு வழக்காக மட்டுமே தொடரப்பட முடியும். கோயில் நில விற்பனை குறித்தோ அல்லது அதில் அமைச்சரைத் தொடர்புபடுத்தியோ பேசப்படும் கருத்துகள், மக்களைச் சாதி மற்றும் மத ரீதியாகத் தூண்டிவிடாது என்று சுட்டிக்காட்டினார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.

முன்னதாக, வினோத் சூர்ய குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. சரவணன் வாதிடுகையில், இந்தக் கைது நடவடிக்கையானது எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும். கோயில் நிலங்கள் தொடர்பான முறைகேடுகளை வெளிக்கொண்டுவருவதே அந்தச் சமூக வலைத்தளப் பதிவின் நோக்கமே தவிர, அமைச்சருக்கு எதிராக எந்தவித தனிப்பட்டப் பகையோ அல்லது உள்நோக்கமோ இல்லை என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில், இந்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விசாரணைக்காக வினோத் சூர்ய குமாரை காவலில் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனை நிராகரித்த நீதிபதி யூடியூபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Source link