பழனி கோவில் நில மோசடி தொடர்பாக… சல்லடை!:திண்டுக்கல், நெல்லையில் சி.பி.சி.ஐ.டி., தீவிர சோதனை

— நமது நிருபர் குழு –

பழனி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சார் – பதிவாளர், கிரயம் பெற்றவர்கள், சாட்சி கையெழுத்திட்டவர்கள், நில புரோக்கர் உள்ளிட்டோர் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.

ஜூலை 6ல், அந்த நிலத்தை, திருப்பூர் மாவட்டம், உடுமலை, பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி, டி.கே.என்.புதுாரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவருக்கு கிரயமாக, பழனி சார் – பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

புகார்

நீதிமன்ற உத்தரவை மீறி, மடம் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டது குறித்து பழனி அடிவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சார் – பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

சார் – பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய இருவரும் சஸ் பெண்ட் செய்யப்பட்டனர் .

இதற்கிடையில், ‘இந்த நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வழக்கு சி.பி. சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது .

ஜூலை 16ல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தொடங்கினர். மதுரை எஸ்.பி., சஜிதா, டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமையில் போலீசார், பழனி கோவில் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், புகார்தாரர்களிடம் விசாரணை நடத்தி, ஆவ ணங்களை பதிவு செய்தனர் .


நில புரோக்கர்

விசாரணையின் மூன்றாம் நாளான நேற்று, திண்டுக்கல் ரவுண்ட் ரோடு மேற்கு பகுதியில் உள்ள சார் – பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை கிரயம் பெற்றவர்களில் ஒருவரான பழனி, டி.கே.என்.புதுார் சேதுபதி, பழனி அடிவாரம், 27வது வார்டு தி.மு.க., செயலர் லட்சுமணன், பொன்னாபுரம் மயில்சாமி, ஒட்டன்சத் திரம் நில புரோக்கர் ஜெயபிரகாஷ் ஆகியோரது வீடுகளில், அதிகாலை முதல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

சார் – பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில், டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமையில் எட்டு பேர் குழுவினர், அதிகாலை 4:00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள், கோப்புகள், வங்கி பரிவர்த்தனைகள், பத்திரங்களை, விசாரணைக்காக நகல் எடுத்துக்கொண்ட போலீசார், மதியம் 12:45 மணிக்கு சோதனை முடித்து கிளம்பினர்.

பழனி டி.கே.என். புதுார் சேதுபதி வீட்டில், இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையில் ஆறு பேர் குழுவினர், காலை 6:00 மணி முதல் 10:00 மணிவரை நடத்திய சோதனையில், சேதுபதி மனைவி ருக்மணியின் மொபைல் போன், வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.


கதவு அடைப்பு

தி.மு.க., செயலர் லட்சுமணனின் கடை, வீட்டில் ஐவர் குழுவினர் சோதனை நடத்தினர். இதேபோல், பொன்னாபுரம் மயில்சாமி வீடு, ஆயக்குடி ஹவுசிங் போர்டில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் சோதனைக்கு சென்ற போலீசார், அங்கு யாரும் இல்லாததால் திரும்பினர்.

மேலும், பழனி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், காலை 10:00 மணிக்கு எஸ்.பி., சஜிதா தலைமையிலான போலீசார், அலுவலக கதவுகளை அடைத்து மதியம் 2:30 வரை சோதனை நடத்தினர்.

இதேபோல், ஒட்டன் சத்திரத்தைச் சேர்ந்த நில புரோக்கரும், பழனி மடம் நிலம் தொடர்பாக பத்திரம் தயார் செய்து கொடுத்தவருமான ஜெயபிரகாஷ் வீட்டில், இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் மதியம் 2:00 மணி வரை சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

இவ்வழக்கில் சம்பந் தப்பட்ட திருப்பூர் மாவட் டம், பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை வீட்டில், கோவை சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையில் ஏழு போலீசார், நேற்று

காலை, 9:00 மணி முதல், 8 மணி நேரம் சோதனையிட்டனர்.

அதன்பின், வெள்ளைத்துரை வீட்டில் இருந்த நில விற்பனை ஆவணங்கள், வங்கி புத்தகம், பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் லேப்டாப்டை போலீசார் எடுத்துச் சென்றனர். விழுப்புரம் முருகதாஸ் வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி டவுன், சாலியர் தெருவை சேர்ந்த மேடை அலங்கார தொழிலாளியும், த.வெ.க., நிர்வாகியுமான சண்முகசுந்தரம், 43, வீட்டில், திண்டுக்கல், திருநெல்வேலி சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர்.

இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. சண்முகசுந்தரத்தை, விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

திருநெல்வேலி வி.எம். சத்திரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குமரகுரு, 46, வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி, விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும், பழநி நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்கள்.

திருநெல்வேலி டவுன், சம்பந்தர் தெருவை சேர்ந்த சிவகுமார் என்பவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


‘கோவில் நிலங்கள், நீர்நிலைகளுக்கு போலி பட்டா’

மதுரையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி:
பழனியின் நடந்த போலி பத்திரப்பதிவு மோசடியை தனிப்பட்ட விவகாரமாக கருத முடியாது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
கோவில் நிலங்கள் தவிர, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கும் போலி பட்டா வழங்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. அரசு நிலங்கள், பொது சொத்துகள் தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளனவா என, விசாரணை நடந்து வருகிறது.
இந்த மோசடி பத்திரப்பதிவு, அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி நடக்க வாய்ப்பில்லை. அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. போலி பத்திரப்பதிவு தொடர்பாக, மாநிலம் முழுதும் தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை விரைவாக விசாரிக்க தனிப்பிரிவு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். த.வெ.க., — எம்.எல்.ஏ.,க்களை தி.மு.க., சார்பில், 50 கோடி ரூபாய் வரை விலைக்கு வாங்க முயற்சி நடக்கிறது. இதுதொடர்பாக, 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், பல கோடி ரூபாயை, பல இடங்களில் பதுக்கி வைத்துள்ளதை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., – பா.ஜ., கூட்டணி குறித்த சந்தேகம் தான், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இருந்து விலக காரணம். தி.மு.க., தனித்து போட்டியிட்டால், 20 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது.
தி.மு.க., தொடர்ந்து சுயநல அரசியல் முடிவுகளை எடுத்தால், அது கட்சியின் கடைசி அத்தியாயமாக அமையும். அ.தி.மு.க., — எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலர் பதவியை நோக்கி உதயகுமார் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Source link