பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியில் மழை- நீர்த்தேக்க பகுதியில் மூழ்கிய பயிர்கள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் நீர் குறையும் காலங்களில் நீர் வளத் துறைக்கு சொந்தமான நிலத்தில் அவரை, தட்டைப்பயிர் பூசணி உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் பயிரிட அப்பகுதியினருக்கு நீர்வளத்துறை அனுமதி அளித்து வந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அனுமதி இல்லை ஆனாலும் முன்பு அனுமதி பெற்றவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மானாவாரி பயிர் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலர் வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது .

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதுபோல் பவானி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 61 அடியை எட்டியுள்ளது. மழை காரணமாக பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள சித்தன்குட்டை,  சுஜ்ஜில் குட்டை, கன்ரா மொக்கை மற்றும் ஜே ஜே நகர்ப் பகுதியில் உள்ள நிலங்கள் நீரில் மூழ்க தொடங்கியுள்ளன. இதனால் அவரை, தட்டைப்பயிர், பூசணி உள்ளிட்டவை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.