லடாக்: ‘பாகிஸ்தானுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. மீறி பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகத்தான் இருக்கும்,’ என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
27வது கார்கில் வெற்றி தினத்தையொட்டி, லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது; இனி பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியைப் பற்றி மட்டும் தான். பயங்கரவாதத்தை உருவாக்குவது பாகிஸ்தான் அரசின் ஒரு கொள்கையாக இருக்கிறது.
பாகிஸ்தானில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்படுகிறது. எனவே, பயங்கரவாதிகளையும், பாகிஸ்துன் அரசாங்கத்தையும் இனி இந்தியா தனித்தனியாக பார்க்காது என்பதைத் ஆப்பரேஷன் சிந்தூரின் போது நாங்கள் தெளிவுபடுத்தினோம். புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி என்பதில் தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில், மற்ற நாட்டுக்குள் ஊடுருவுவது மற்றும் பயங்கரவாதம் போன்ற வேலைகளைத் தான் பாகிஸ்தான் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
