எழுதியவர்: சுஜித் பிசோய்
மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, ரண்டால் செகுவேரா பலரும் தேர்ந்தெடுக்காத ஒரு பாதையைத் தேர்வு செய்தார். தான் வளர்ந்த மும்பை நகரை விட்டு வெளியேறி, ஒடிசாவின் காலாஹண்டி மாவட்டத்திற்குச் சென்றார். அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு இன்றளவும் அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.
உள்ளூர் மக்களின் மருத்துவ வசதியை மேம்படுத்த அவர் உழைத்த அதே வேளையில், 39 வயதான செகுவேரா, அப்பகுதியில் நடக்கும் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகவும் மற்ற சமூக ஆர்வலர்களைப் போல குரல் கொடுத்து வந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க
அக்டோபர் 16 அன்று இரவு சுமார் 11 மணியளவில், காலாஹண்டியில் உள்ள செகுவேராவின் வீட்டிலிருந்து அவரையும், மற்றொரு சுரங்க எதிர்ப்பு ஆர்வலரான லக்ஷ்மண் நாயக்கையும் காலாஹண்டி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அதிகாரிகளால் ராயகடா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட செகுவேரா, தற்போது அங்குள்ள கிளைச் சிறையில் நீதித்துறை காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி, கலவரம் தூண்டுதல் மற்றும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய தென்மேற்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் அகிலேஷ்வர் சிங், அப்பகுதியில் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
“அவர் மீது குறைந்தது நான்கு முதல் ஐந்து தீவிர வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மாநில அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு அப்பகுதி மக்களைத் தூண்டிவிட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. பழங்குடியின பெண்கள் இருவரும் அவர் தங்களை தூண்டிவிட்டதாக புகார் அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
ராயகடா மாவட்டத்தில் உள்ள சிஜிமாலி பாக்சைட் சுரங்கத்திற்கு அணுகுசாலை அமைப்பது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பழங்குடியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலுடன் இந்த கைது தொடர்புடைது என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இரு தரப்பிலும் சிலர் காயமடைந்த இந்த மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் செகுவேராவின் பெயர் இடம்பெறவில்லை என்றாலும், விசாரணையின் போது அவருடைய பங்கு உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த செகுவேரா, மும்பையில் வளர்ந்து அங்குள்ள பள்ளியில் பயின்றார். பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டமும், ராஜஸ்தானின் சவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள் மருத்துவம் பிரிவில் எம்.டி பட்டமும் பெற்றார். 2017-ஆம் ஆண்டில், பழங்குடியினப் பகுதிகளில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக காலாஹண்டியில் குடியேற முடிவெடுத்தார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சுயாதீனமாக பணியாற்றத் தொடங்கினார். அங்குள்ள தொலைதூரக் கிராமங்களுக்கு பயணம் செய்து பழங்குடியினருக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவர்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ளவும் முயன்றார்.
“பழங்குடியினரிடையே நீண்டகாலமாக பரவி வரும் மலேரியா மற்றும் காசநோய்க்கு சிகிச்சை அளிக்க மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்காமல், அதற்குப் பின்னால் இருக்கும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் புரிந்துகொள்ள செகுவேரா முயற்சிப்பார்” என்று காலாஹண்டியில் அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் தேவால் சவர்க்கர் தெரிவித்தார்.
மருத்துவர்களையும் மருந்துகளையும் மட்டுமே முழுமையாக சார்ந்திருக்காமல், மக்கள் தங்கள் சொந்த சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று செகுவேரா நம்பியதாக அவர் கூறினார். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்த அவர் கிராமம் கிராமமாகச் செல்வார். ஊட்டச்சத்து மற்றும் மகப்பேறு சுகாதார சவால்களுக்குத் தீர்வு காண்பதுடன், அவர்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தீவிரப் பங்கு வகிக்க வைப்பார் என்று தேவால் கூறினார்.
நண்பர்களின் கூற்றுப்படி, செகுவேரா பழங்குடியின மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவியுள்ளார். செகுவேராவின் லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவர் ஆதிவாசி சமூகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார் மற்றும் அடிப்படை முதன்மை சுகாதார சேவையை வழங்குவது குறித்து தன்னார்வ சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். ”சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான முடிவுகளை எடுப்பதில் உள்ளூர் ஏஜென்சியை உருவாக்க சமூகங்களுக்கு இது நேரடியாக அதிகாரம் அளிப்பதால் நான் இதை விரும்புகிறேன்” என்று அவர் எழுதியுள்ளார்.
அங்கு இருந்த காலத்தில், பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிரான பழங்குடியினரின் போராட்டத்திற்கும் செகுவேரா ஆதரவளிக்கத் தொடங்கினார். செப்டம்பர் 2023-ல், முன்மொழியப்பட்ட பாக்சைட் சுரங்கத் தளமான சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள், வரைபடங்கள் மற்றும் சுரங்க எதிர்ப்புப் பொருட்களை விநியோகித்ததற்காக, ராயகடா மாவட்டத்தின் காஷிப்பூர் காவல்துறை செக்குவேரா குறித்து ஒரு பொது நாட்குறிப்பில் பதிவு செய்தது.
ஜூலை 2025-ல், ரண்டால் செகுவேரா ராயகடா மாவட்டத்திற்குள் நுழைவதைத் தடை செய்து, பி.என்.எஸ்.எஸ் பிரிவு 163-ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ‘விலக்கு உத்தரவை’ ஒடிசா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆபத்து, பொது இடையூறுகள், கலவரங்கள் அல்லது பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான அச்சுறுத்தல்களைத் தடுக்க தற்காலிக எழுத்துப்பூர்வ உத்தரவுகளைப் பிறப்பிக்க நிர்வாக நடுவர்களுக்கு இந்தப் பிரிவு அதிகாரம் அளிக்கிறது.
அவரது எம்.பி.பி.எஸ் காலத்து மூத்த மாணவரும் மருத்துவருமான செரியாக் ஆபி பிலிப்ஸ் கூறுகையில், செகுவேராவும் நாயக்கும் பிடி வாரண்ட், கைது குறிப்பாணை என எந்த காரணமும் இன்றி இரவோடு இரவாகப் பிடித்துச் செல்லப்பட்டு, வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்க விடாமல் வைக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டினார்.
“காலாஹண்டி மற்றும் ராயகடாவின் தொலைதூர மலைகளில் உள்ள ஆதிவாசி சமூகங்களுக்கு சுகாதார சேவைகளைக் கொண்டு சேர்க்க ரண்டால் பல ஆண்டுகளைச் செலவிட்டுள்ளார். சிஜிமாலி மற்றும் குட்ருமாளி மலைகளில் பாக்சைட் தோண்டி எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆதிவாசி மற்றும் தலித் சமூகங்கள் மீதான பரவலான அடக்குமுறையின் ஒரு பகுதியே அவரது கைது. நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இயக்கத் தலைவர்கள் ஜாமீன் பெறும்போதெல்லாம் புதிய வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள்” என்று பிலிப்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியுள்ளார்.
பாக்சைட் சுரங்கத்திற்கு எதிரான போராட்டம்
சிஜிமாலி மற்றும் குட்ருமாளி ஆகியவை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இரு வளமான பாக்சைட் தொகுதிகளாகும். ராயகடா மற்றும் காலாஹண்டி மாவட்டங்களில் பரவியுள்ள இந்த இரண்டு தொகுதிகளிலும் உயர்தர பாக்சைட் இருப்பதாக அறியப்படுகிறது. சிஜிமாலி தொகுதி 1,500 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இதன் மதிப்பிடப்பட்ட இருப்பு 311 மில்லியன் டன்களாகும், அதே நேரத்தில் குட்ருமாளி தொகுதி 702 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இதன் மதிப்பிடப்பட்ட இருப்பு 127.737 மில்லியன் டன்களாகும்.
பிப்ரவரி 2023-ல் வேதாந்தா நிறுவனம் சிஜிமாலி சுரங்கத்தைக் கைப்பற்றிய நிலையில், அதானி குழுமத்திற்குச் சொந்தமான காலிங்கா அலுமினா லிமிடெட் (முன்னர் முந்த்ரா அலுமினியம் லிமிடெட்) குட்ருமாளி பாக்சைட் தொகுதிக்கான விருப்பமான ஏலதாரராக அறிவிக்கப்பட்டது.
இந்த பாக்சைட் சுரங்கத் திட்டம் தங்களது வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறி சில பழங்குடியினர் எதிர்த்து வருகின்றனர். இத்திட்டம் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயன்படும் என்பதால், ரயில் இணைப்பு மற்றும் சாலை அமைத்தல் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களையும் அவர்கள் எதிர்த்து வருகின்றனர். ‘மா மதி மாலி சுரக்ஷா மஞ்சா’ அமைப்பு அப்பகுதியில் சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
ஏப்ரல் 7 அன்று, காந்தமால் கிராமத்தில் அதிகாலை வேளையில் காவல்துறை நடத்திய சோதனையானது, பழங்குடியினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது. சிஜிமாலி சுரங்கத் திட்டத்திற்கான அணுகுசாலை அமைப்பதை எதிர்ப்பவர்களை கைது செய்யக் அதிகாலை 3 மணிக்குக் காவல்துறை கிராமத்தில் சோதனை நடத்தியதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சோதனைக்கு முன்னர் கிராமத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், கதவுகளை உடைத்துக் கொண்டு காவல்துறை வீட்டிற்குள் நுழைந்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். பிணையில் வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது செய்யவே கிராமத்திற்கு சென்றதாக காவல்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 58 பேர் காயமடைந்தனர், மேலும் 23 சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் கிராமவாசிகள் கைது செய்யப்பட்டனர்.
காலாஹண்டி மாவட்டத்தில் உள்ள நியாம்கிரி மலையில் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராக 12 ஆண்டுகள் போராட்டத்தை முன்னெடுத்ததற்காக 2017-ல் ‘கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு’ பெற்ற சமூக ஆர்வலர் ப்ரஃபுல்ல சமந்தரா, செகுவேராவின் கைதைக் கண்டித்துள்ளார். “ரண்டால் போன்ற ஒரு மருத்துவர் அரசியலமைப்பு உரிமைக்கு உட்பட்டு பழங்குடியினரின் நலனில் அனுதாபம் கொள்வது குற்றமா?” என்று காலாஹண்டி மற்றும் ராயகடா எஸ்.பி-க்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். லோக் சக்தி அபியானின் தேசிய அமைப்பாளரான சமந்தரா, உள்ளூர் பழங்குடியினர், தலித் கிராமவாசிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களைக் கைது செய்வதன் மூலம் தொடர்ந்து நடைபெறும் காவல்துறையின் அடக்குமுறையையும் கண்டித்துள்ளார்.
