சென்னையின் மிக முக்கிய விரைவுச் சாலையான உள்வட்டச் சாலையில் பாடி பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ.155 கோடி மதிப்பீட்டில் 1.1 கிலோமீட்டர் நீளமுள்ள குறுகிய சாலைப் பகுதியையும் இரயில் மேம்பாலத்தையும் அகலப்படுத்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக டிடி நெக்ஸ்ட் பக்கத்தில் தெரிவித்துள்ளது. தற்போது மூன்று வழிச்சாலையாக உள்ள மேம்பாலத்தையும், அதன் அணுகுசாலைகளையும் அகலப்படுத்தி, உள்வட்டச் சாலையின் இருபுறமும் தலா 5 வழிகள் கொண்டதாக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். பாடி இரயில் நிலையம் அருகே சாலை இரு வழிப்பாதையாகக் சுருங்குவதாலும், மேம்பாலத்தின் இறுதியில் உள்ள கூர்மையான வளைவுகளாலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நெரிசலும் ஏற்பட்டு வந்தன.
தற்போது நெடுஞ்சாலைத் துறை தனக்குரிய பணிகளில் 94 சதவீதத்தை நிறைவு செய்துவிட்டது. அதேவேளையில் இரயில்வே நிர்வாகம் பாலத்தின் அடிப்பகுதி கட்டமைப்புகளைப் பலப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளைச் செய்து வருகிறது. இந்தப் பணிகள் முழுமையாக முடிந்ததும், மீதமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகப் பாலம் திறந்துவிடப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நெரிசலைக் குறைக்கவும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேம்பாலத்தின் அடியில் பாடி மற்றும் செங்குன்றம் செல்லும் பகுதிகளில் யூ-டர்ன் வசதியுடன் கூடிய சேவைச் சாலைகளை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு ஜூலை 2025-இல் ரூ. 14.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 354 மீட்டர் முதல் 424 மீட்டர் வரை அமையவுள்ள சேவைச் சாலைகளில், 75 மீட்டர் பகுதி இரயில்வே பாலத்தின் அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரயில்வே பாலத்திற்கு அடியில் 5.5 மீட்டருக்கும் அதிகமான உயர இடைவெளியும், பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல தொடர்ச்சியான நடைபாதைகளும் அமைக்கப்பட உள்ளன.
இந்த புதிய சேவைச் சாலைகள் பயன்பாட்டிற்கு வரும்போது, வில்லிவாக்கம், கொளத்தூர், தாத்தன்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கொரட்டூர் வடக்கு சந்திப்பில் காத்திருக்காமல் நேரடியாகக் கொரட்டூர் மற்றும் செங்குன்றம் பகுதிகளை எளிதாக அடைய முடியும். மேலும், வில்லிவாக்கம் ஏரியில் அமையவுள்ள சென்னை மாநகராட்சியின் பொழுதுபோக்கு பூங்காவிற்குச் செல்பவர்களுக்கும், வீல்ஸ் இந்தியா, லூகாஸ் டி.வி.எஸ், சுந்தரம் கிளட்டன் போன்ற தொழிற்பேட்டை நிறுவனங்களின் சரக்குப்போக்குவரத்திற்கும் இத்திட்டம் பெரும் உதவியாக அமையும்.
