பாமகவின் அடுத்த பாய்ச்சல்: எகிறும் அரசியல் முக்கியத்துவம்- பம்பரமாய் சுழலும் சவுமியா அன்புமணி – importance of pmk after madurantakam dharapuram bypoll results in tamil nadu politics

பாமக என்றாலே வன்னியர்களின் கட்சி என்ற அடைமொழியை திருத்தி எழுதுவதற்கு அன்புமணி மிகவும் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இதற்கு சவுமியா எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது பெரிதும் பலனளித்து வருகிறது. சமீபத்திய இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் தங்களது முக்கியத்துவத்தை உணரச் செய்துள்ளனர்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக ஏன் அதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை களத்தில் நிற்கவில்லை என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். இதுதொடர்பாக அக்கட்சி தலைவர் அன்புமணி விளக்கம் அளிக்கும் போது, இந்த இடைத்தேர்தலை ஜனநாயக விரோதம் என்றே அடையாளப்படுத்துகிறோம். தவெக வேட்பாளர்களை எதிர்த்து பூவை ஜெகன்மூர்த்தி போன்ற பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். ஆனால் அவர் எங்களின் ஆலோசனையை ஏற்காமல் தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தி விட்டார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் விலகி நிற்கிறோம்.

பாமக வாக்குகளால் வென்ற தவெக

அதிமுக தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று விமர்சித்திருந்தார். இதில் நேர்மறையான நோக்கம் தான் உள்ளது என்ற நிலையில், பாமக தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். அதை ஏற்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அக்கட்சி எம்.எல்.ஏ கணேஷ் குமார் தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக விலகி நின்ற நிலையில், அதன் வாக்குகள் தான் தவெக வேட்பாளரை வெற்றி பெற வைத்தது என்ற பார்வையை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். அதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு.

சட்டமன்றத்தில் மாஸ் காட்டும் சவுமியா அன்புமணி!

என்.டி.ஏ கூட்டணியில் தொடரும் அன்புமணி

ஏனெனில் ஏற்கனவே தனித்து களம் கண்டு தங்களது வாக்கு வங்கி என்னவென்று கணித்தவர்கள். பூத் வாரியாக எவ்வளவு வாக்குகள் இருக்கின்றன என்று மதுராந்தகம் தொகுதியில் நன்றாக தெரிந்திருக்கும். இந்த சூழலில் கூட்டணியாகவும், அரசியல் ரீதியாகவும் அடுத்தகட்ட நகர்வு என்னவென்ற கேள்வி எழுகிறது. பாமக தற்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது என்று சவுமியா அன்புமணி உறுதிபடுத்தியுள்ளார். எனவே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் வரை, இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது எனப் புரிந்து கொள்ளலாம். இதற்கிடையில் அரசியல் ரீதியாக தங்களை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்ல பாமக விரும்புகிறது.

சமூக அடையாளத்தை உடைக்கும் பாமக

பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரை சொன்னாலே வன்னியர் சங்கத்தில் இருந்து உருவானது. அந்த சமூக மக்களுக்காகவே செயல்பட்டு வருகிறது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முக்கிய பங்காற்றியவர்கள். இவ்வாறான கருத்துகள் இயல்பாகவே முன்வைக்கப்படும். தற்போது அத்தகைய பார்வை சற்றே மாற தொடங்கியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சவுமியா அன்புமணி. இவர் தர்மபுரி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார். கூட்டத்தொடரில் இவர் முன்வைத்த ஆக்கப்பூர்வமான விஷயங்கள் தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் கவனம் ஈர்த்தது.

சவுமியா அன்புமணியால் மாறும் கட்சியின் முகம்

இத்தனை ஆண்டுகள் அன்புமணியால் செய்ய முடியாததை சட்டப்பேரவைக்குள் நுழைந்த நான்கே மாதங்களில் செய்து காட்டியுள்ளார். அதற்கு பசுமை தாயகம் அமைப்பு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியாக களப் பணியாற்றியதும், நதிநீர் பிரச்சினைகள், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றில் பாமகவின் தொடர்ச்சியான முன்னெடுப்புகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்போது பொது நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு தமிழர் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிநீர் மேலாண்மை, அடுத்த தலைமுறையினர் பழக வேண்டிய அரசியல் என தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

பாமக முன்னெடுத்த போராட்டங்கள்

பாமகவின் சமூக பங்களிப்பு குறித்து கணேஷ் குமாரின் சமீபத்திய பேட்டியும் கவனிக்கத்தக்கது. அதாவது, பாமக இன்று மட்டுமல்ல. தொடர்ச்சியாக அனைவருக்கும் தான் போராடி வருகிறோம்.
தலித் மக்கள், நாடார் சமூகம், அருந்ததியர் இட ஒதுக்கீட்டு போராட்டங்கள், இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை வென்று தந்துள்ளோம், இவர்கள் ஒடுக்கப்பட்ட போது முதல் குரல் எழுப்பினோம், கிறிஸ்துவர்களுக்கான போராட்டத்தில் நாங்கள் நின்றிருக்கிறோம், காவிரியில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு பெங்களூருவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது 1,000 வாகனங்களில் படையெடுத்து சென்றோம், ஈழத் தமிழர் பிரச்சினையில் இன்று வரை சமரசமின்றி செயல்பட்டு வருவது

அனைவருக்குமான கட்சியாக முன்னகர்வு

இவ்வாறு நீண்ட பட்டியலை வாசித்தார். இவ்வாறு தமிழர் நலன் சார்ந்து பாமக தொடர்ந்து செயல்படுவதாக குறிப்பிட்டார். தற்போதைய ஜென் ஸி யுகத்தில் பாமகவின் நகர்வு என்பது தங்களை ஒரு சாதிய வட்டத்திற்குள் நுழைத்து விடக் கூடாது. அனைவருக்குமான கட்சியாக எங்களின் போராட்டங்கள் அமைந்திருக்கின்றன என வரலாற்றில் உதாரணங்களை எடுத்து சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

Source link