பாரம்பரிய கட்டடங்களை பாதுகாத்து லாபநோக்கில் பயன்படுத்த அரசு திட்டம்

– நமது நிருபர் –

தமிழகத்தில், பாரம்பரிய கட்டடங்களை புனரமைத்து, பாதுகாத்து, லாப நோக்கில் பயன்படுத்த, பொதுப்பணித் துறை முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், மன்னர்கள், முகலாயர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, 264 பாரம்பரிய கட்டடங்கள் உள்ளன; இவை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

அதிகபட்சமாக சென்னை 58; கோவை 20; தஞ் சாவூர் 17;, கன்னியாகுமரி, மதுரை, சேலம் ஆகியவற்றில் தலா 12; புதுகோட்டையில் 10; திருப்பூர் மற்றும் திருவண்ணாமலையில், தலா 9 கட்டடங்கள் உள்ளன. மற்ற மாவட் டங்களில், ஒன்றிரண்டு கட்டடங்கள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலும், மருத்துவத் துறை, நீதித்துறை, உயர்க்கல்வித்துறை, வருவாய் துறை போன்ற துறைகளின் அலுவலக பயன்பாட்டில் உள்ளன. மற்ற கட்டடங்கள், சிதைந்த நிலையில் உள்ளன. இந்நிலையில், பாரம்பரிய கட்டடங்களை மீட்டெடுத்து, லாப நோக்கில் அதை பயன்படுத்த, பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, அரசு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

ஆனால், அந்த கட்டடத்தின் மதிப்பு தெரியாத துறைகள், அதன் பழமையை மாற்றியும், பராமரிக்காமலும் சிதைத்து விடுகின்றன. தற்போது, மிக மோசமான கட்டடங்களைக் கண்டறிந்து, அவற்றை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை, அரசு அலுவலகங்களுக்கு ஒதுக்கினால், அவை மீண்டும் சேதமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழமையான கட்டடங்களை லாப நோக்கில் பயன்படுத்தவும், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மாற்றவும், சுற்றுலாத் துறையுடன் பேச்சு நடந்து வருகிறது.

சுற்றுலாத்துறை மறுத்தால், பொதுப்பணித் துறை சார்பில், ஒளியும் ஒலியும் காட்சி, கபே போன்றவை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link