பாலிவுட் நடிகர் இம்ரான்கான் இந்தியாவை விட்டு வெளியேறும் உத்தரவு; மும்பை ஐகோர்ட் இடைக்கால தடை

மும்பை: பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு மும்பை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. நவ.2 வரை அவர் மும்பையில் தங்கியிருக்கவும் அனுமதி வழங்கி இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உறவினர் இம்ரான்கான். இவர் இந்தியாவில் பிறந்தவர், ஆனால் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் இம்ரான்கான் கலந்து கொண்டார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர், தாய்நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதா என்று கண்டனக் குரல்கள் எழுந்தன. அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. வெளிநாட்டு பதிவு அலுவலகமும், இம்ரான்கான் அக்.28ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் இம்ரான் கான் மனுதாக்கல் செய்தார். விசாரணையின் போது, தமது தரப்பை பதிலை கேட்காமலே நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று இம்ரான் கான் தரப்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசின் தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வழக்கில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்பதால் ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதன்படி வழக்கு விசாரணையை நவ.2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

அதுவரை, நாட்டை விட்டு இம்ரான் கான் வெளியேற வேண்டும் என்ற நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, நவ.2 வரை இந்தியாவில் இருக்க இம்ரான் கானுக்கு சட்டப்பூர்வமாக இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது.

Source link