சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கடந்த 15ஆம் தேதி ஆன்லைன் மூலமாக ஆவின் பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த 18ஆம் தேதி அந்த பால் பாக்கெட்டை அவர் பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “தனக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதாகவும், குழந்தைக்கு முதன்முதலாகப் பாலை அறிமுகப்படுத்த நினைக்கும் பெற்றோர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன” என்று அவர் தனது பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆவின் நிர்வாகம் இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுள்ளது. மேலும், இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் தரப்பில் தற்பொழுது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
