பாவம்.! ரத்தன் டாடா கம்பெனிக்கு இப்படியொரு நிலைமையா.! வரிசையாக வெடிக்கும் சர்ச்சைகள்

மும்பை: ரத்தன் டாடா மறைந்தது முதலே டாடா குழுமத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் வரிசையாக வெடித்து வருகிறது. குறிப்பாக சந்திரசேகரனின் மறுநியமனம் இப்போது பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இதற்கிடையே இதில் முக்கியமான பல ஆவணங்களை கோரி நோயல் டாடா கடிதம் எழுதியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மேனாக என். சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டதை டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா கடுமையாக எதிர்த்து வருகிறார். சந்திரசேகரனின் மறுநியமனத்துக்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கும் சந்திரசேகரனின் குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டனவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று அக்டோபர் 26ம் தேதி, டாடா சன்ஸ் நிறுவன செயலாளர் சுப்ரகாஷ் முகோபாத்யாய்க்கு நோயல் டாடா எழுதிய எட்டு பக்கக் கடிதத்தில் இந்த விவகாரங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். செப்டம்பர் 17ம் தேதி சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சேர்மேனாக நியமிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த முடிவுக்கான வாரிய கூட்ட பதிவுகள், வாக்குப்பதிவு விவரங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட ஆவணங்களை அவர் கோரியுள்ளார்.

சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரியில் முடிவடைகிறது. அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் வழங்குவதற்கு செப்டம்பர் 17ம் தேதி டாடா சன்ஸ் வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த மறுநியமன தீர்மானம் என்பது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் தெளிவாக இடம்பெறவில்லை என்று நோயல் டாடா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நியமனம் மற்றும் ஊதிய குழுவின் விளக்க கூட்டம் என்று மட்டுமே அந்த கூட்டம் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அந்த கூட்டம் குறித்த விவரங்கள் இயக்குநர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நிறுவனத்தின் விதிகளின்படி அமைக்கப்பட வேண்டிய தேர்வு குழு உருவாக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மறுநியமனத்துக்கு தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை என்றும், வாரிய கூட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லி, பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கூட்டத்தின் ஆடியோ-வீடியோ பதிவு, இறுதியாக கையெழுத்திடப்பட்ட ஆவணங்கள், தனிப்பட்ட இயக்குநர்களின் வாக்குகள், நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை அவர் கோரியிருக்கிறார்.

இந்த விவகாரத்தின் மற்றொரு முக்கிய அம்சம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கும் ஹன்னோ ஒன் வேர் ஹவுசிங் (Hanno One Warehousing) நிறுவனத்துக்கும் இடையே இருக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள். ஹன்னோ ஒன் நிறுவனத்தின் இயக்குநர்களில் சந்திரசேகரனின் மனைவி லலிதா மற்றும் மகன் பிரணவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அந்த நிறுவனத்தின் பெரும்பகுதி உரிமை ஹன்னோ இன்ஃப்ரா எல்எல்பி வசம் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே சுமார் 17.41 ஏக்கர் நிலத்தை ஹன்னோ ஒன் நிறுவனம் 29 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், அங்கு சுமார் 3.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் தொழிற்சாலையை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.106 கோடி என்றும், இதற்காக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரூ.27 கோடி முன்பணமாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மைசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலைக்கு அருகே சுமார் ரூ.330 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் குறித்து டாடா சன்ஸ் வாரியத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று நோயல் டாடா கூறியுள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் அவை வாரியத்தால் பரிசீலிக்கப்பட்ட விதம் குறித்த ஆவணங்களையும் அவர் கோரியுள்ளார்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், டாடா சன்ஸ் இயக்குநராகவும் நியமனம் மற்றும் ஊதிய குழு உறுப்பினராகவும் உள்ளார். சந்திரசேகரனின் மறுநியமனம் குறித்து செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற குழு ஆலோசனையிலும், செப்டம்பர் 17ம் தேதி நடந்த வாரியக் கூட்டத்திலும் வேணு சீனிவாசன் கலந்து கொண்டு சந்திரசேகரனுக்கு ஆதரவாக வாக்களித்ததாக நோயல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் விஷயம் என்னவென்றால்.. சந்திரசேகரனின் குடும்பத்தினர் இயக்குநர்களாக இருக்கும் ஹன்னோ ஒன் நிறுவனத்திற்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கும் வர்த்தக தொடர்புகள் உள்ளன. எனவே, இதை வேணு சீனிவாசன் முன்கூட்டியே டாடா கூட்டத்தில் தெரிவித்து, மறுநியமனம் தொடர்பான ஆலோசனை மற்றும் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்பதே நோயல் முக்கிய வாதமாகும்.