பா.ம.க 2.0: அரசியல் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த ராமதாஸ்… சாதி அடையாளத்தைத் தாண்டி; புதிய பாதையை உருவாக்குவாரா அன்புமணி?

எழுதியவர் : அருண் ஜனார்தனன்

திண்​டிவனம் அடுத்த கோனேரிக்​குப்​பத்​தில் உள்ள கல்வி நிலை​யத்​தில் தனது 88-வது பிறந்த நாளை ராம​தாஸ் நேற்று கொண்​டாடி​னார். ராம​தாஸும், அன்​புமணி​யும் ஓராண்​டுக்கு பிறகு ஓரே மேடை​யில் அமர்ந்​திருந்​தனர். மரக்​கன்​றுகளை நட்டு வைத்து ராம​தாஸ் பேசி​ய​தாவது, நான் அரசி​யல் பேச மாட்​டேன். அரசி​யலுக்கு வழி​காட்ட மாட்​டேன். என்னை சந்​திக்க வருபவர்​களை பார்ப்​பேன், நலம் விசா​ரிப்​பேன், அவ்​வளவு​தான். அரசியலில் தலை​யிட​மாட்​டேன். அரசி​யலை அன்​புமணி பார்த்​துக்​கொள்​வார். 

வெளியூர் போறீங்களா? கொஞ்சம் கவனமாக இருங்கள் – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

அவரது மனை​வி​யும், நாங்​களும் துணை​யாக இருப்​போம். என்னை பார்க்க வருபவர்​கள் என்னை பார்த்​து​விட்​டு, அய்யா நலமா என விசாரித்துச் செல்​லலாம். அரசி​யல் பேசுவதற்கு ஏது​மில்​லை. இன்று முதல் அரசி​யல் துறவறம் மேற்​கொண்​டிருக்​கிறேன். உங்களு​டன் நீண்ட நேரம் பேச ஆசை இருந்​தா​லும், தலை சுற்​றல் வியா​தி, இப்​போதும் எட்டிபார்க்​கிறது. ஆனாலும் உங்​களை பார்க்க வேண்​டும் என ஆவலுடன் வந்​துள்​ளேன். என்னை வாழ்த்​தும் உங்​களது நல்ல உள்​ளம், எனக்​கும் உங்​களுக்​கும் இருக்​கும் உறவு எப்போதும் மாறாது. இவ்​வாறு பேசி​னார்.

அரசியல் அமைப்பு கட்டுப்பாடு, கூட்டணிகள் மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்து இருவருக்கும் இடையே வெளிப்படையாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பா.ம.க-வை எதிரெதிர் முகாம்களாகப் பிரித்த கடுமையான தலைமைப் போராட்டத்திற்குத் தந்தையும் மகனும் முடிவு கட்டிய சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது. கடந்த மாதம் தைலாபுரத்தில் அவர்கள் உணர்வுபூர்வமாக மீண்டும் இணைந்தது சமரசத்தைக் காட்டியது. சனிக்கிழமையன்று வெளியான அறிவிப்பு அந்த சமரசத்தை அதிகாரப்பூர்வ வாரிசு மாற்றமாக மாற்றியுள்ளது.

ராமதாஸின் பாரம்பரியம்

விழுப்புரம் கிராமத்து மருத்துவராக இருந்த ராமதாஸ், தனது குறைந்த கட்டண மருத்துவச் சேவையால் உள்ளூர் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார். 1980-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் மிகப் பெரிய மற்றும் அரசியல்ரீதியாக ஒருங்கிணைந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்  ஒன்றான வன்னியர் சமூகத்திற்கு அதிக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற விரும்பி, அவர் வன்னியர் சங்கத்தைத் தோற்றுவித்தார்.

அந்த இயக்கம் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு அரசியலை அடிப்படையிலேயே மாற்றியமைத்தது. 1980-கள் முழுவதிலும், வன்னியர் போராட்டம், கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீட்டைக் கோரியது. அது ஒரு தனித்துவமான போராட்ட பாணியையும் உருவாக்கியது. வட தமிழகம் முழுவதும் சாலைகள் தடுப்புகளால் அல்லாமல், புதிதாக வெட்டப்பட்ட சாலையோர அரசு மரங்களால் மறிக்கப்பட்டன. கிராமங்கள் தங்களின் எல்லைகளிலேயே நெடுஞ்சாலைகளை முடக்கின. ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்புகளும் ஸ்தம்பித்தன. செப்டம்பர் 1987-ல் நடைபெற்ற ஒரு வார கால சாலை மறியல் போராட்டம் வட தமிழகத்தின் பெரும் பகுதிகளை முடக்கியது. 

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு

அந்தப் போராட்ட முறை மிகவும் பிரபலமடைந்ததால், பா.ம.க-வின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் “காடுவெட்டி”  குரு என்ற அடைமொழியை என்றென்றும் தாங்க வேண்டியதாயிற்று. அந்தப் பெயர் அந்தப் போராட்டக் காலத்தின் அடையாளமாகவே மாறியது. அந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறின. துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் பல உயிர்கள் பலியாயின. ஆனால் அவை தங்களின் மைய அரசியல் இலக்கை அடைந்தன.

1989-ல் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அன்றிருந்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட எம்.பி.சி (MBC) பிரிவில் வன்னியர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்குத் தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது ராமதாஸ் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் கோரும் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக இன்றும் உள்ளது. அந்தச் சமூக இயக்கத்திலிருந்தே 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சி உருவானது.

அவர்களின் இலட்சியம்  சிறிதாக இல்லை. தமிழ்நாட்டிலேயே ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து ராமதாஸ் மீண்டும் மீண்டும் பேசினார். ஒருகட்டத்தில், பா.ம.க பிறந்த உடனேயே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தான் நம்பியதாகவும், ராஜீவ் காந்தி படுகொலை உள்ளிட்ட வரலாறு அந்தப் பாதையை மாற்றி அமைத்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் யதார்த்தம் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

வாக்கு வங்கி சரிவு

பா.ம.க ஒரு காலத்தில் கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி அரசுகளைத் தீர்மானிக்கும் ஆற்றல் கொண்ட தவிர்க்க முடியாத கூட்டணிக் கட்சியாக உருவெடுத்தது. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று, பல ஆண்டுகளாகக் கூட்டணி அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக விளங்கியது.

ஆனால் அதன் வாக்கு வங்கித் செல்வாக்கு தொடர்ந்து சரிந்தது. 2009, 2011, 2014 மற்றும் 2016 தேர்தல்களில் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. 2016-ல் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளையும் இழந்தது. 2021-ல் அ.தி.மு.க-வுடனான கூட்டணியின் மூலம் மட்டுமே 5 எம்.எல்.ஏ-க்களுடன் சட்டப்பேரவைக்குத் திரும்பியது. இன்று பா.ம.க தோராயமாக 4 சதவீத வாக்கு வங்கியை மட்டுமே கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தல்களும் இதேபோன்ற சரிவையே பிரதிபலித்தன. 2009-ல் எம்.பி-க்கள் இல்லை, 2014-ல் ஒருவர், அதற்குப் பிறகு யாருமில்லை.

தலித் மக்களுடனான உறவு

குறிப்பாக தர்மபுரி மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் தலித் மக்களுடன் வன்னியர் சமூகம் கொண்டிருந்த பதற்றமான உறவோடு பா.ம.க நெருக்கமாகத் தொடர்புபடுத்தப்பட்டது.  2012-ல் நடந்த தர்மபுரி வன்முறை, தமிழ்நாட்டின் மிக இருண்ட சாதி மோதல்களில் ஒன்றாக இன்றும் உள்ளது. சமூக உரிமைகள் என்ற பெயரில் சாதியை பா.ம.க ஊக்குவிப்பதாகக் விமர்சகர்கள் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டினர்.

தலித் இளைஞர்கள் சாதிமாறித் திருமணம் செய்யத் தமிழ் சினிமா ஊக்குவிப்பதாக 2013-ல் குற்றம்சாட்டிய ராமதாஸ், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அவரது ஆதரவாளர்கள் இடஒதுக்கீட்டைத் தந்த சிற்பியாக அவரை நினைவில் கொள்கிறார்கள்; அவரது விமர்சகர்களோ விலக்கி வைக்கும் அரசியலாக அவரை நினைக்கிறார்கள். இந்த இரண்டு நினைவுகளும் இப்போது ஒரே அரசியல் சுயசரிதைக்குள் ஒன்றாகவே வாழ்கின்றன.

கடந்த ஆண்டு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு அமல்படுத்தத் தவறினால் “வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்கள்” வெடிக்கும் என எச்சரித்தார். மே 2025-ல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றிய அவர், தொண்டர்கள் திரட்டலைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பூத் அளவிலான கட்டுக்கோப்பான பணி தேர்தல் தலையெழுத்தையே மாற்றும் என்றும் நினைவூட்டினார்.

அதிகாரம் கைமாறுதல் 

அப்போதுகூட, தலைமுறை மாற்றம் முழுமையடையாமல் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அதே மேடையில், ராமதாஸ் நிர்வாகிகள் வேலை செய்யாவிட்டால் பதவிகள் நிலைக்காது என்று பகிரங்கமாக எச்சரித்துக் கொண்டிருக்க, அன்புமணி அவர் அருகில் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். சனிக்கிழமை நிகழ்வு அந்த நீண்டகால நிச்சயமற்ற நிலைக்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைத்தது. “அன்புமணி அனைத்தையும் பார்த்துக்கொள்வார்,” என்று ராமதாஸ் அறிவித்தார்.

தந்தையைப் போலல்லாமல், அன்புமணி தேசிய அளவிலான நிர்வாக நற்பெயரோடு தலைமைப் பொறுப்பிற்குள் நுழைகிறார். தமிழ்நாட்டை ஆளும் திறன் கொண்ட, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த அரசியல் கட்சியாக பா.ம.க-வை மாற்றப் போவதாக அவர் மீண்டும் மீண்டும் பேசியுள்ளார். இருப்பினும்,  “பா.ம.க 2.0”-வை உருவாக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியும் இறுதியில் அதே தீர்க்கப்படாத கேள்விக்கே திரும்புகிறது. 

சாதியத் திரட்டலால் பிறந்த ஒரு கட்சியால், அதை உருவாக்கிய சமூக அடையாளத்தைத் தாண்டி உண்மையிலேயே வளர முடியுமா? புதிய அரசியல் சக்திகள் பழைய தேர்தல் கணக்குகளைக் கலைத்துப் போட்டுள்ள இன்றைய தமிழ்நாட்டில், சாதி கணக்குகள் மட்டுமே போதுமானதாக இல்லாத சூழலில் இந்த சவால் எப்படி வெற்றி பெறும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source link