பிகார்: போராடும் மாணவர்களை நோக்கி ஏகே-47 ரக துப்பாக்கியை நீட்டும் காவலர் – முழு பின்னணி

பட மூலாதாரம், @yadavtejashwi

படக்குறிப்பு, சிவான் மாவட்டத்தில் ஏகே-47 துப்பாக்கி சுடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

பிரசுரிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிகாரின் சிவான் மாவட்டத்தில் ஜூலை 25 அன்று, தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்திப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களின் குழுவை நோக்கி, பிகார் காவல்துறை காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியை நீட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. பிகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், இது மாணவர்கள் மீது காவல்துறை ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட நாட்டின் முதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பூரன் ஜா, பிபிசி நியூஸ் ஹிந்தி செய்தியாளர் சீட்டு திவாரியிடம், இந்த விவகாரத்தில் பிகார் காவல்துறையின் எஸ்ஐடி காவலர் அபிஷேக் படேல் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எஸ்பி பூரன் ஜா பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், மூன்று போராட்டக்காரர்களில் ஒருவருக்கு காவல்துறையின் தோட்டா பாய்ந்துள்ளது, மீதமுள்ள இருவருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

காயமடைந்தவர்களில் எவர் மீதும் ஏகே-47 துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டாக்கள் பாயவில்லை என்றும் அவர் கூறினார். ‘ஏகே-47 துப்பாக்கி காற்றில் சுடப்பட்டது, அதனால் பாயும் தோட்டாக்கள் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கும்’ என்று அவர் மேலும் கூறினார்.

ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது 25 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும், காயமடைந்த மூன்று போராட்டக்காரர்களும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் பிபிசி செய்தியாளர் சீட்டு திவாரி தெரிவித்துள்ளார்.

பிகார் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காயமடைந்த மூன்று நபர்களில் ஒருவர் சிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பிறகு கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவிற்குப் பிறகு சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

ஜூலை 20 அன்று சிஜேபி அமைப்பின் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி போராட்டத்தின் போது காவல்துறை தடியடி நடத்திய பிறகு, இந்த இயக்கம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது.

சிவான் மாவட்டத்தின் இந்த வீடியோ குறித்து கூறுகையில், நாட்டில் எந்தவொரு மாணவர் போராட்டத்திலும் காவல்துறை கையேட்டை மீறி ஏகே-47 துப்பாக்கியால் சுடப்பட்ட முதல் சம்பவம் இதுதான் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த கட்டமைப்பும் மாணவர்களுக்கு எதிராக உயிருக்கு ஆபத்தான முறையில் நின்றுகொண்டிருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அதே நேரத்தில், “போராட்டத்தை செயற்கையாக உருவாக்கி” அராஜகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

முழு பின்னணி என்ன?

ஜூலை 25 அன்று தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் 'பிகார் பந்த்'திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூலை 25 அன்று தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் ‘பிகார் பந்த்’திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் பிகார் காவல்துறை காவலர் ஒருவர் போராட்டம் நடத்தும் கூட்டத்தை நோக்கி ஏகே-47 துப்பாக்கியை நீட்டுவதைக் காண முடிகிறது. இந்த வீடியோவில் ஒரு தோட்டா சுடப்படும் சத்தமும் கேட்கிறது.

பிகார் காவல்துறையும் இந்த வீடியோவை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் முகமையிடம் உறுதிப்படுத்தியுள்ளது. குண்டு துளைக்காத ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்த காவலர் ஒருவர் கூட்டத்தை நோக்கி ஏகே-47 துப்பாக்கியுடன் ஓடுவதைக் காண முடிவதாகவும், காற்றில் குறைந்தபட்சம் மூன்று சுற்றுகள் சுடப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பிகார் காவல்துறை டிஐஜி நிலேஷ் குமார் ராய்ட்டர்ஸ் முகமையிடம் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும், அந்தப் போலீஸ் கான்ஸ்டபிள் உளவுத்துறை பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார் என்றும், அவர்கள் ‘கடுமையான குற்றவாளிகளைக் கையாளுபவர்கள்’ என்றும், அவர்களுக்குத் தாக்குதல் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

“கான்ஸ்டபிள் ஏகே-47 துப்பாக்கியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது” என டிஐஜி நிலேஷ் குமார் ராய்ட்டர்ஸ் முகமையிடம் தெரிவித்தார்.

“அவர் இதனைத் தவறாகப் பயன்படுத்தினார், அவர்கள் மாணவர்கள். அப்படிச் செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் அங்கு இருக்கவில்லை, அதனால்தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

தேஜஸ்வி யாதவ் என்ன கூறினார்?

தேஜஸ்வி யாதவ், "நாளை எந்தவொரு காவல்துறை அதிகாரியும் எந்தவொரு தலைவர், அமைச்சர், முதலமைச்சர் மீதும் எப்போதும் எங்கும் எவ்வித காரணமுமின்றி துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தேஜஸ்வி யாதவ், “நாளை எந்தவொரு காவல்துறை அதிகாரியும் எந்தவொரு தலைவர், அமைச்சர், முதலமைச்சர் மீதும் எப்போதும் எங்கும் எவ்வித காரணமுமின்றி துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏகே-47 (AK-47) துப்பாக்கிச்சூட்டின் வைரல் வீடியோ குறித்து பிகாரில் இருந்து டெல்லி வரை அரசியல் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வருகின்றன.

பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், மாணவர்கள் மீது காவல்துறை ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட முதல் சம்பவம் இதுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் ஒரு சமூக ஊடகப் பதிவில் தேஜஸ்வி யாதவ், “பிகாரில் மாணவ போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அதிகாரி எவ்வாறு ஏகே-47 துப்பாக்கியால் சுடுகிறார் என்று பாருங்கள். ஒட்டுமொத்த தேசத்திலும் எந்தவொரு மாணவர் போராட்டத்திலும் காவல்துறை கையேட்டை மீறி ஏகே-47 துப்பாக்கியால் சுடப்பட்ட முதல் சம்பவம் இதுவே” என குறிப்பிட்டுள்ளார்.

“ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குடிமக்களின் அரசியலமைப்பு உரிமையாகும். இதே நடைமுறை தொடர்ந்தால், இனிவரும் காலங்களில் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், தங்களின் உரிமை மற்றும் அதிகாரத்துக்காகப் போராடும் மாணவர்கள்-இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் மீதும்கூட பாஜக அரசாங்கங்கள் ஏகே-47 துப்பாக்கிகளால் சுட உத்தரவிடுமா?”

“நாளை எந்தவொரு காவல்துறை அதிகாரியும் எந்தவொரு தலைவர், அமைச்சர், முதலமைச்சர் மீதும் எப்போதும் எங்கும் எவ்வித காரணமுமின்றி துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா? இத்தகைய விவகாரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மட்டும்தான் குற்றவாளியா? அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் அல்லவா? உள்துறை அமைச்சரின் பொறுப்புக்கூறல் நிர்ணயிக்கப்பட வேண்டும், இல்லையெனில் மாநிலத்தில் அராஜகமான சூழ்நிலை உருவாகிவிடும். குற்றப் பின்னணி கொண்ட ஒரு நபரைப் பிகார் முதலமைச்சராக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அல்ல, நியமிக்கப்பட்ட முதலமைச்சர்.”

மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இது நமது ஜனநாயக வரலாற்றிலேயே நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். இதற்கு முன்பாக ஒருபோதும் மாணவர்கள் தங்களின் குரலை உயர்த்தியதற்காக அடிக்கப்படவோ, இழுத்துச் செல்லப்படவோ, குற்றவாளிகளைப் போல நடத்தப்படவோ இல்லை” என்றார்.

“பிகாரில், மாணவர்களுக்கு எதிராக ஏகே-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன. இதற்குப் பொறுப்பானவர்கள், தங்களின் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிவிட முடியாது” என்றார்.

மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு எஃப்ஐஆர்-ம் பதிவும் செய்யப்படாது என்ற பிரதமர் மோதியின் அந்த வாக்குறுதி என்னவானது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு எஃப்ஐஆர்-ம் பதிவு செய்யப்படாது என்ற பிரதமர் மோதியின் அந்த வாக்குறுதி என்னவானது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “ஒட்டுமொத்த கட்டமைப்பும் மாணவர்களுக்கு எதிராக உயிருக்கு ஆபத்தானதாக உள்ளது. பிகாரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன, மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

“மோதி அவர்களே, மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு எஃப்ஐஆர்-ம் பதிவு செய்யப்பட மாட்டாது என்றும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் நீங்கள் அளித்த அந்த வாக்குறுதி என்னவானது? அதற்குப் பதிலாக அவர்கள் மீது உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன மற்றும் அவர்கள் கொடூரமான முறையில் நடத்தப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.

“டெல்லியில் மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன மற்றும் பிகாரில் ஏகே-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசமாக இருக்கட்டும், மேற்கு வங்கம், பிகார் அல்லது டெல்லி என ஒவ்வொரு இடத்திலும் ஒரே மாதிரியான நடைமுறையைத்தான் காண முடிகிறது” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி, “இந்த அரசாங்கம் நேர்மையற்றது என்று நான் முன்பே கூறியுள்ளேன். அதனால், சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்று . இது தனது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கிவிடும் மற்றும் மாணவர்களின் குரலை ஒடுக்குவதற்காக ஒவ்வொரு வழியையும் கையாளும்” என்றார்.

நாட்டின் மாணவர்களிடம் பிரதமர் மோதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களிடம் கொடூரமாக நடந்துகொண்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி மீது பாஜக குற்றச்சாட்டு

ராகுல் காந்தி பொய்களைப் பரப்ப முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி பொய்களைப் பரப்ப முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் “மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது” “மிகவும் வெட்கக்கேடான விஷயம்” என்று பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மக்களவை எம்.பி-யுமான சம்பித் பாத்ரா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒரு பதவியில் இருக்கும் நபர், இது போன்ற பொய்களைப் பரப்புவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்றார்.

ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய பாத்ரா, “அவர் பொய்களைப் பரப்ப முயற்சி செய்கிறார். ஏகே-47… ராகுல் காந்தி பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் குறிப்பாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த நாட்டின் காவல்துறை எப்போதாவது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்துமா? அப்படி எப்போதாவது நடந்ததுண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.

“ஏகே-47 பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி எப்படிச் சொல்ல முடியும்? இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, மேலும் இது போன்ற பொய் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக ராகுல் காந்தி இந்த நாட்டிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி இப்போது நாட்டில் பயம் மற்றும் அராஜகச் சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பதாகச் சம்பித் பாத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

“காக்ரோச் ஜனதா கட்சி தனது போராட்டத்தை தானே திரும்பப் பெற்றுக் கொண்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதன் பிறகு ஜந்தர் மந்தரில் நடந்து வந்த போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது” என அவர் கூறினார்.

“இத்தகைய பிரசாரங்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாட்டில் பயம், சீர்குலைவு மற்றும் அராஜகச் சூழ்நிலையை உருவாக்க விரும்புகிறார்கள். இது மிகவும் ஆட்சேபனைக்குரியது” என்று அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், “நாட்டில் அராஜகம் பரவாமல் இருக்க உண்மையை முன்னிறுத்த வேண்டும்” என்றும் சம்பித் பாத்ரா மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“அவர் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரைப் போல நடந்துகொள்ள வேண்டும் மற்றும் இத்தகைய தவறான கூற்றுகளைப் பரப்பியதற்காக இந்த நாட்டிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன் ” என அவர் கூறினார்.

“இயல்பாகவே, ராகுல் காந்தியின் நோக்கம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அல்ல. அவரது நோக்கம் வெறும் சலசலப்பை ஏற்படுத்துவது, செயற்கையான கோபத்தை உருவாக்குவது, போலியான போராட்டத்தைக் கட்டமைப்பது மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் அராஜகத்தைப் பரப்புவது மட்டுமே” என பாத்ரா குற்றம்சாட்டுகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link