சென்னை,
இந்தியா முழுவது பிரபலமாக இருக்கக்கூடிய ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் 9 சீசன்கள் முடிந்து, 10-வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே பல விமர்சனங்கள் உள்ளன. இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் (Script) என்றும், எடிட்டிங்கில் போட்டியாளர்களைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்றும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பட்டியலில் இப்போது நடிகையும் மாடலுமான சோனாலி ராவத் இணைந்துள்ளார்.
விரைவில் முடிவடைய உள்ள மராத்தி பிக் பாஸ் சீசன் 6-ல் சோனாலி ராவத் பங்கேற்றார். ஆனால், வெறும் இரண்டு வாரங்களிலேயே அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதற்கான காரணத்தை விளக்கி அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் அனுப்பியுள்ள நோட்டீஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்த சூழலால் தான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் துன்பத்திற்கு ஆளானதாக சோனாலி கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் நிலவிய சுகாதாரமற்ற சூழலால் தனக்கு ‘எக்ஸிமா’ (Eczema) எனும் கடுமையான சரும நோய் ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஷோவில் இருந்து வெளியேறி மூன்று மாதங்கள் ஆகியும், இன்னும் அந்த நோய் குணமாகவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 2 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிக் பாஸ் குழுவினருக்கு அவர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சோனாலி ராவத் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நெட்டிசன்கள் விதவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் இது பப்ளிசிட்டிக்காகச் செய்யப்படுவதாகவும் கூறி வருகின்றனர். பிக் பாஸ் போன்ற ஒரு பெரிய ரியாலிட்டி ஷோ மீது ஒரு போட்டியாளர் இவ்வளவு பெரிய தொகையை நஷ்டஈடாகக் கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
