புதுடில்லி: பிரதமர் மற்றும் பிற முக்கிய கணக்குகளின் பதிவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விவரித்து மத்திய அரசுக்கு மெட்டா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 23ல், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘மெட்டா’ நிறுவனத்துக்குச் சொந்தமான, ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில், இளம் தலைமுறையினருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பிரதமர் மோடி, ‘செல்பி’ வீடியோ வெளியிட்டார்.அதில், ‘வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்’ என, உறுதி அளித்திருந்தார். பின், இந்த வீடியோவை, ‘பேஸ்புக்’கிலும் அவர் பகிர்ந்தார். இந்த வீடியோ திடீரென, ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கப்பட்டது.
‘பேஸ்புக்’கில் இருந்து பிரதமர் மோடியின் வீடியோ பதிவை நீக்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, ‘மெட்டா’வின் உலகளாவிய பொது கொள்கை தலைவருக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மெட்டா நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
மெட்டா நிறுவனம் எழுதிய கடிதத்தில், பிரதமர் மற்றும் பிற முக்கிய கணக்குகளின் பதிவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விவரிக்கப்பட்டுள்ளது.பிரதமர் பதிவிட்ட உள்ளடக்கங்கள் மற்றும் முக்கிய கணக்குகள் மீது கூடுதல் கண்காணிப்பு நடத்தப்படும் என்றும். உயர் மட்டத்தில் ஆய்வு நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக இந்த வாரத்தின் பிற்பகுதியில் அல்லது அடுத்த வாரத்தின் துவக்கத்தில் மத்திய அரசு அதிகாரிகளை மெட்டா குழுவினர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
