பிரதமரின் பயண விபரங்களை வெளியிட ஐகோர்ட் மறுப்பு

புதுடில்லி: நம் விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானங்களில், பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயண விபரங்களை, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவலறியும் உரிமை சட்டத்தில் வெளியிட மத்திய தகவல் கமிஷன் பிறப்பித்த உத்தரவை, டில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான லோகேஷ் கே.பத்ரா என்பவர், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், 2013 ஏப்., 1 – 2018 ஜூன் 5 வரை, நம் விமானப்படை விமானங்களில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விபரங்களை ஆர்.டி.ஐ., மூலம் கோரியிருந்தார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை நீக்கி, மற்ற விபரங்களை வழங்கும்படி, 2020 ஜூலையில், நம் விமானப்படைக்கு மத்திய தகவல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, நம் விமானப்படை சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அமித் மகாஜன், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு பொது நிதி செலவிடப்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காக, அத்தகைய பயணங்களுக்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சமரசம் செய்யக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட முடியாது. இந்த தகவல்களை மறுக்க விமானப்படைக்கு முழு உரிமை உண்டு.

ஒரு குறிப்பிட்ட தகவலை வெளியிடுவது, பிரதமரின் உயிருக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம், அந்த பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு முகமைகளுக்கே உரியது. அவற்றின் முடிவில் நீதிமன்றமோ அல்லது தகவல் கமிஷனோ தலையிட முடியாது. எனவே, மத்திய தகவல் கமிஷனின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Source link