புதுடில்லி: பிரதமரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுவேன் என புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி அளித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். கல்வி துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு பிரகலாத் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து, பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறியதாவது: தன்னடக்கத்துடன் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்; இந்தியா கல்வித்துறையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது; பிரதமரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுவேன்.
பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய ஒரு முக்கிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து உள்ளார். நான் நேர்மையாகப் பணியாற்றி இந்த துறையில் அவரது எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்.
கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் தர்மேந்திர பிரதானும் புதிய கல்வி கொள்கை திட்டத்தை செயல்படுத்தினார். புதிய கல்வி முறையில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.
