இதனையடுத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை கடந்த 25ஆம் தேதி (25.07.2026) ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா, 2026-ஐ நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கும் மத்தியில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் நேற்று (27.07.2026) அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து மசோதா அறிமுகத்திற்கு மக்களவை குரல் வாக்கெடுப்பு மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையேமாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது பேஸ்புக் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அவற்றில் ஒரு வீடியோ திடீரென நீக்கப்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேஸ்புக் வீடியோ பதிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதமரின் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் விளக்கம் கேட்க மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அந்த பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
