தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்த கட்சிகளுடன் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் வரும் செப்டம்பர் 9 ஆம் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்றைய தினம் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர் தவெக அமைச்சர்கள். இதனை தொடர்ந்து இன்றைய தினம் காங்கிரஸ், விசிக அலுவலகங்களுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் நேரில் வந்து கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் அமைச்சர்களுடான சந்திப்புக்கு பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தவெக தலைமையில் அரசு அமைவதற்கு ஆதரவு அளித்த கட்சிகளுடைய தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் ஏற்கனவே நடந்தது. இரண்டாவது கட்டமாக வருகின்ற 9 ஆம் தேதி மாலை நான்கு மணி அளவில் முதல்வர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டணி சம்பந்தமான ஆலோசனை கூட்டம். தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கும்.
அமைச்சரவையில் பங்கேற்காத கட்சிகளும், குறிப்பாக மதிமுக உள்ளிட்ட சில கட்சிகளும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்நிகழ்வில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும். அதற்கான அழைப்பினை விடுப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
முதல்வரின் சார்பாக அதிகாரப்பூர்வமாக வந்து அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என திருமாவளவன் தெரிவித்தார். தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் குறித்து கேட்கப்பட்டதற்கு நேரடியாக பதில் அளிக்காமல், 9 ஆம் தேதிக்கு பிறகு பேசி கொள்வோம் என ட்விஸ்ட் உடன் பதில் அளித்தார் திருமாவளவன்.
இதனையடுத்து ஆலோசனை கூட்டத்தில் எதைப்பற்றி விவாதிக்கப்பட உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கூட்டணி, எதிர்கால திட்டம், பெயர் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றார். தொடர்ந்து அவரிடம் மாணிக்கம் தாகூர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என பேசியுள்ளது சம்பந்தமாக கேட்கப்பட்டதற்கு, 2029 தேர்தல். அதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. கூட்டணியே அதற்காக தான் உருவாக்க போகிறோம். 9 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு பாருங்க என்று பதிலளித்தார்.
