பட மூலாதாரம், MAURO PIMENTEL/AFP via Getty Images
கட்டுரை தகவல்எழுதியவர், அம்ரிதா ஷர்மாபதவி, பிபிசி மானிட்டரிங்
பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன் மோதல்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தத் தயாராகி வரும் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
நிறுவனர் உறுப்பினர்களான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன், விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது எகிப்து, எத்தியோப்பியா, சௌதி அரேபியா, இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் மேலும் 10 கூட்டாளர் நாடுகளும் இணைந்துள்ளன.
இவை அனைத்தும் சேர்ந்து உலக மக்கள்தொகையில் 49 சதவிகிதத்தையும், உலக நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதத்தையும் சர்வதேச வர்த்தகத்தில் 26 சதவிகிதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
“வெவ்வேறு வலிமைகள், ஒரே பொதுவான நோக்கம்” என்பதே இந்த உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ முழக்கம். உறுப்பு நாடுகளின் கூட்டு வலிமையைப் பயன்படுத்தி உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதே இதன் நோக்கம்.
இருப்பினும், 2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா பல சிக்கலான அம்சங்களைக் கையாள வேண்டியிருக்கும். இரான் மற்றும் யுக்ரேன் போர்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், அமெரிக்க டாலர் சார்பைக் குறைக்கும் முயற்சிகள் போன்ற விவகாரங்களைச் சமாளிப்பதுடன், சீனாவுடனான நலன் சார்ந்த போட்டியையும் இந்தியா நிர்வகிக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில், ‘உலக தெற்கின்’ (Global South) குரலாகத் தன்னை நிலைநிறுத்தும் தனது பரந்த இலக்கையும் முன்னெடுத்துச் செல்ல முயல்கிறது.
ஒருமித்த பிரிக்ஸ் பிரகடனம், விநியோகச் சங்கிலி ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு மற்றும் எல்லை தாண்டிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எட்டுவதை இலக்காகக் கொண்டு, நடைமுறைப் பலன்களை மையப்படுத்திய உச்சி மாநாட்டை நடத்த இந்தியா முயன்று வருகிறது.
தலைமை வகிக்கும் இந்தியா முன்னுள்ள முக்கிய சவால்கள்
இந்த உச்சி மாநாட்டில் இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய சவால், மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் ஒருமித்த கருத்தை உருவாக்கி, கூட்டு பிரிக்ஸ் பிரகடனத்தை வெளியிடுவதாகும். ஆனால், பிராந்தியப் போட்டியாளர்களான இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருப்பதால், இந்தப் பொறுப்பு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.
மே மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், மத்திய கிழக்கு போர் தொடர்பான மாறுபட்ட கருத்துகள் காரணமாகக் கூட்டு அறிக்கை வெளியிட முடியாமல் போனது. அந்த நிலைமை மீண்டும் ஏற்படுவதை இந்தியா விரும்பாது. அந்தச் சம்பவம், இந்த மோதல் தொடர்பாகக் கூட்டமைப்புக்குள் நிலவும் ஆழமான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியது.
பட மூலாதாரம், PABLO PORCIUNCULA/AFP via Getty Images
படக்குறிப்பு, பிரேசிலில் கடந்த 2025 ஜூலை மாதம் சந்தித்துப் பேசிய சீன பிரதமர் லி கியாங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி
உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, செப்டம்பர் 11 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் நடத்தவுள்ள இருதரப்புப் பேச்சுவார்த்தையில் யுக்ரேன் மோதலும் விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள அமைதி முயற்சிகளை ரஷ்யா வரவேற்றுள்ளது.
“இந்த முக்கியமான தூதரகப் பேச்சுவார்த்தைகள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது நடைபெறவுள்ளதாக” ஸ்புட்னிக் இன்டர்நேஷனலின் தலைவர் டிமிட்ரி சைம்ஸ் ஜூனியர், WION செய்தித் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
வாஷிங்டனுடன் நிலவும் சுங்கவரி பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடனான உறவைச் சமநிலைப்படுத்துவது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் மற்றுமோர் அம்சம். அதேவேளையில், பிரேசில், ரஷ்யா போன்ற சில பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் முன்வைக்கும் பொதுவான நாணயம் தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா கவனிக்க வேண்டியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பை, மேற்கு நாடுகளுக்கு எதிரான (anti-Western) கூட்டணியாக அல்லாமல், மேற்கு நாடுகளுக்கு மாற்றான (non-Western) தளமாகவே இந்தியா தொடர்ந்து முன்னிறுத்தி வந்துள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிக்ஸை “அமெரிக்காவுக்கு எதிரானது” என்று வர்ணித்ததுடன், டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை உருவாக்க முயலும் நாடுகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருப்பது இந்தியா மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
“உலக தெற்கு நாடுகளுக்கான வலுவான தளமாக பிரிக்ஸ் மாற வேண்டுமென டெல்லி விரும்புகிறது. அதோடு, இந்தக் கூட்டமைப்பு வெறுமனே அமெரிக்காவுக்கு எதிரான அல்லது மேற்கு நாடுகளுக்கு எதிரான கூட்டணியாக மாற வேண்டுமென்ற எண்ணத்தையும் இந்தியா ஏற்கவில்லை. இந்த இரு நிலைகளுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதுதான் இந்தியாவின் மூலோபாய சுயாட்சியின் மையக் கருத்து” என்று செப்டம்பர் 9 அன்று WION இணையதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், VYACHESLAV PROKOFYEV/POOL/AFP via Getty Images
டாலர் சார்பைக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து, பிரிக்ஸ் அமைப்புக்கென பொதுவான நாணயத்தை உருவாக்குவதற்கு இந்தியா “ஆதரவு அளிக்கவில்லை” என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, உறுப்பு நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளையும், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் (Central Bank Digital Currencies) பயன்பாட்டையும் இந்தியா ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய், சீனாவின் டிஜிட்டல் யுவான், ரஷ்யாவின் டிஜிட்டல் ரூபிள் ஆகியவற்றைப் பொதுவான எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை அமைப்பின் மூலம் இணைக்கும் முன்னோடித் திட்டத்தை உச்சி மாநாட்டில் அறிமுகப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி ஹிந்தி நாளிதழான தைனிக் பாஸ்கர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் பிரிக்ஸ் விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டமைப்பிற்குள் உருவாகியுள்ள மாறுபட்ட முன்னுரிமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் பேண வேண்டுமென்ற சவாலையும் இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
“இந்த விரிவாக்கம் பிரிக்ஸின் பொருளாதார மற்றும் தூதரக முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. ஆனால், உறுப்பு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் வேறுபட்டிருப்பதால், ஒருமித்த கருத்தை எட்டுவது மேலும் சிக்கலானதாக மாறியுள்ளதாக” செப்டம்பர் 6 அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட விளக்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் இந்தக் கூட்டமைப்பு எந்தத் திசையில் நகரும் என்பதையும் தீர்மானிக்கக்கூடும் என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
“விரிவுபடுத்தப்பட்ட இந்தக் கூட்டமைப்பு, தனது வளர்ந்து வரும் பொருளாதார வலிமையை, அதிகளவில் பல்முனைத் தன்மை பெற்று வரும் உலக ஒழுங்கில் வலுவான குரலாக மாற்ற முடியுமா என்பதை டெல்லி உச்சி மாநாடு சோதித்துப் பார்க்கக்கூடும்” என்று செப்டம்பர் 8 அன்று அவுட்லுக் இதழ் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் குறிப்பிடக்கூடிய ‘மேற்கு நாடுகளின் ஆதிக்கத்திற்கு’ சவால் விடுக்கும் முக்கிய புவிசார் அரசியல் தளமாக பிரிக்ஸை பார்க்கின்றன.
“போட்டியிடும் தேசிய நலன்களும், மேற்கு நாடுகளுக்கு மாற்றான ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளும் நிலவும் நிலையில், இந்த உச்சி மாநாடு உலக அதிகாரச் சமநிலைகளை மறுவரையறை செய்யக்கூடும்” என்று செப்டம்பர் 7ஆம் தேதியன்று சி.என்.என்.-நியூஸ்18 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
பட மூலாதாரம், PAVEL GOLOVKIN/POOL/AFP via Getty Images
சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த இந்தியாவால் முடியுமா?
சீனாவுடனான இருதரப்பு உறவுகளைப் பாதிக்காமல், பிரிக்ஸ் அமைப்புக்குள் சீனாவின் செல்வாக்கைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் இந்தியா எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய சவால்.
“பிரிக்ஸின் ஒருங்கிணைந்த வலிமை குறித்து எவ்வளவு பேசப்பட்டாலும், வர்த்தகம், முதலீடு, உற்பத்தி மற்றும் முக்கியக் கனிம வளங்கள் மீதான தனது கட்டுப்பாடின் மூலம், மற்ற உறுப்பு நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனா சமச்சீரற்ற அளவில் அதிக செல்வாக்கைக் கொண்டிருப்பதாக” செப்டம்பர் 9ஆம் தேதி ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.
மூலோபாயப் போட்டியும் பரஸ்பர பதற்றங்களும் இந்தியா–சீனா உறவின் போக்கைத் தொடர்ந்து முடிவு செய்து வரும் நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் பொதுவான இலக்குகளை முன்னெடுப்பதற்காக இந்தியா சீனாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்திக்கும் வாய்ப்பு உருவானால், அது “பிரிக்ஸ் அமைப்புக்குள் உள்ள அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது” என்று செப்டம்பர் 8 அன்று WION செய்தித் தொலைக்காட்சி தெரிவித்தது.
பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம், சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த டெல்லிக்கு உதவும் என்று இந்திய நிபுணர்கள் நம்புகின்றனர். பிரிக்ஸ் அமைப்புடன் தொடர்புடைய முன்னாள் அதிகாரியான தாமோதர் ரவியின் கருத்துப்படி, இந்த விரிவாக்கம் “கூட்டமைப்புக்கு அதிக வலிமை மற்றும் முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி, சீனாவால் இந்த நிகழ்வின் முழு கவனத்தையும் தனதாக்கிக் கொள்ள முடியாது.”
பட மூலாதாரம், Sanjeev Verma/Hindustan Times via Getty Images
இந்த உச்சி மாநாட்டின் மூலம் இந்தியா அடைய விரும்புவது என்ன?
இந்தியா, வெறும் அறிவிப்புகளைத் தாண்டி நடைமுறைப் பலன்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த விரும்புகிறது. உலகளாவிய நிர்வாகம், பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டுப் பிரகடனத்தை வெளியிடுவதும் அதன் இலக்குகளில் ஒன்று.
இந்த அணுகுமுறை, இந்த ஆண்டுக்கான “மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளுடன் இணங்குகிறது.
மே மாதத்தில் உச்சி மாநாட்டின் செயல் திட்டத்தை அறிவித்தபோது, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரிக்ஸ் “விவாதத்திற்கான அமைப்பாக மட்டுமின்றி, செயல்படுத்துவதற்கான தளமாக மாற வேண்டும்” என்று கூறினார்.
இந்தியா அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருமித்த இறுதிப் பிரகடனத்தை வெளியிடுவதில் வெற்றி பெற்றால், “உலக தெற்கின் முதன்மையான குரலாகவும், உலக அரசியலில் சமநிலையை ஏற்படுத்தும் இன்றியமையாத சக்தியாகவும் அதன் நிலைப்பாடு மேலும் வலுவடையும்” என்று செப்டம்பர் 1ஆம் தேதி ஃபர்ஸ்ட்போஸ்ட் செய்தித் தளத்தில் வெளியான விளக்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நாணயக் கொள்கை, வர்த்தகம் மற்றும் மத்திய கிழக்கு மோதல் போன்ற விவகாரங்களில் நிலவும் கருத்து வேறுபாடுகள் “உச்சி மாநாட்டின் செயல்பாடுகளை மறைக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினால், விரிவடைந்து வரும் இந்தக் கூட்டமைப்பின் கட்டமைப்பு சார்ந்த வரம்புகள் வெளிப்படையாகத் தெரிய வரும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த முறை, பிரிக்ஸ் என்பது வெறும் எண்ணிக்கைகள் பற்றியதாக மட்டுமில்லை. இது அதிகாரம் பற்றியது, உலக தெற்கைப் பற்றியது. மேலும், நாளைய உலக ஒழுங்கை வடிவமைக்கும் உரிமை யாருக்குக் கிடைக்கிறது என்பது பற்றியது” என்று செப்டம்பர் 6ஆம் தேதி ரிபப்ளிக் டிவியில் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கியவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




